search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி
    X

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி கண்டார்.
    பாரீஸ் :

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    இதில் 10-வது நாளான நேற்று கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), 19 வயதான லாத்வியா வீராங்கனை ஜெலீனா ஒஸ்டாபென்கோவை சந்தித்தார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கரோலின் வோஸ்னியாக்கி 6-4, 2-5 என்ற கணக்கில் இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பலத்த மழை கொட்டியதால் சில மணி நேர பாதிப்புக்கு பிறகு ஆட்டம் தொடர்ந்தது. முதல் செட்டை இழந்த ஜெலீனா ஒஸ்டாபென்கோ பின்னர் அபாரமாக செயல்பட்டு வெற்றியை தனதாக்கினார். முடிவில் ஜெலீனா ஒஸ்டாபென்கோ 4-6, 6-2, 6-2 என்ற கணக்கில் வோஸ்னியாக்கிக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.


    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று மழை குறுக்கிட்டது. ரசிகர்கள் குடைப்பிடித்தபடி ஆட்டத்தை காண காத்து நின்ற காட்சி.

    மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீராங்கனை டிமா பாசின்ஸ்கி, பிரான்ஸ் வீராங்கனை கிறிஸ்டினா மாடெனோவிச்சை எதிர்கொண்டார். இதில் டிமா பாசின்ஸ்கி 6-4, 1-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து நடந்த அந்த ஆட்டத்தில் டிமா பாசின்ஸ்கி 6-4, 6-4 என்ற நேர்செட்டில் கிறிஸ்டினா மாடெனோவிச்சை சாய்த்து அரை இறுதிக்குள் நுழைந்தார்.

    மழை காரணமாக நேற்று நடக்க இருந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டங்கள் நாளை (இன்று) தள்ளிவைக்கப்படுவதாக போட்டி அமைப்பு குழுவினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×