search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஆன்டி முர்ரே - சிமோனா ஹாலெப்
    X

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஆன்டி முர்ரே - சிமோனா ஹாலெப்

    பாரீஸ் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஆன்டி முர்ரே, ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
    பாரீஸ் :

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் பிரிவில் நடந்த 4-வது சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்டில் காரென் காச்சனோவை (ரஷியா) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 0-6, 6-4, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் பெர்னாண்டோ வெர்டஸ்கோவையும் (ஸ்பெயின்), முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 7-5, 7-6 (9-7), 6-1 என்ற நேர் செட்டில் கேல் மான்பில்சையும் (பிரான்ஸ்) வீழ்த்தினர். வாவ்ரிங்கா கால்இறுதியில் மரின் சிலிச்சை (குரோ ஷியா) எதிர்கொள்கிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் சுவாரஸ் நவரோவை (ஸ்பெயின்) வெளியேற்றி கால்இறுதியை எட்டினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி நேரம் மட்டுமே தேவைப்பட்டது. இந்த ஆண்டில் தனது சிறந்த ஆட்டம் இது என்று ஹாலெப் வர்ணித்தார்.



    மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை நட்சத்திரமான உக்ரைன் மங்கை எலினா ஸ்விடோலினா, தகுதி நிலை வீராங்கனையும், 290-வது தரவரிசையில் உள்ளவருமான பெட்ரா மார்டிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார். முதல் இரு செட்டுகளை தலா ஒருவர் வீதம் தனதாக்கிய நிலையில் கடைசி செட்டில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 3-வது செட்டில் மார்டிச் 5-2 என்று முன்னிலை கண்டு வெற்றியின் விளிம்பில் இருந்தார்.

    அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி பெற்ற ஸ்விடோலினா வரிசையாக 5 கேம்களை வசப்படுத்திய பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டார். 2 மணி 5 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்விடோலினா 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    ஸ்விடோலினா கூறுகையில், ‘பின்தங்கி இருந்த போது மனம் தளர்ந்து விடக்கூடாது; என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற முடிவோடு போராடினேன். முதுகுவலியால் கொஞ்சம் தடுமாறிப்போனேன். கால்இறுதியில் வலுவான வீராங்கனையாக மீண்டு வருவேன்’ என்றார்.

    கால்இறுதியில் ஹாலெப்-ஸ்விடோலினா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    கலப்பு இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் சானியா மிர்சா (இந்தியா), இவான் டோடிக் (குரோஷியா) இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
    Next Story
    ×