search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: இங்கிலாந்து-வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்
    X

    சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: இங்கிலாந்து-வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்

    8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நாளை தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இங்கிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
    லண்டன்:

    ‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 1998-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி கோப்பையை வென்றது.

    இதுவரை 7 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெற்றுள்ளன.முதல் 2 போட்டியும் ஐ.சி.சி. நாக்அவுட் டிராபி என்று அழைக்கப்பட்டது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அதிகபட்சமாக தலா இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளனர். இந்திய அணி 2002-ல் இலங்கையுடன் இணைந்து கூட்டாக வென்றது.

    தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தலா 1 முறை வென்றன. தொடக்கத்தில் 2 ஆண்டுக்கு ஒரு முறையும், பின்னர் 3 ஆண்டுக்கு ஒரு முறையும், அதை தொடர்ந்து 4 ஆண்டுக்கு ஒரு முறையும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

    கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை டோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    8-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நாளை (1-ந்தேதி) தொடங்குகிறது. ஜூன் 18-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.



    இதில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கின்றன. 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கணக்கின் படி தரவரிசையில் உள்ள ‘டாப் 8’ நாடுகள் தகுதி பெற்றன. வெஸ்ட்இண்டீஸ் 9-வது வரிசையில் இருந்ததால் வாய்ப்பை இழந்தது. வங்காளதேசம் அணி அந்த அணியை பின்னுக்கு தள்ளி வாய்ப்பை பெற்றது. 2006-க்கு பிறகு வங்காளதேசம் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு திரும்பி உள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடும் 8 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் விவரம்:-

    ‘ஏ’ பிரிவு: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (போட்டியை நடத்தும் நாடு), நியூசிலாந்து, வங்காளதேசம்.

    ‘பி’பிரிவு: இந்தியா (நடப்பு சாம்பியன்ஸ்), தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான்.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    12-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டம் முடிகிறது. 13-ந்தேதி ஓய்வு நாளாகும். 14-ந்தேதி முதல் அரை இறுதியும், 15-ந்தேதி 2-வது அரை இறுதியும் நடைபெறும். 16 மற்றும் 17-ந்தேதி ஓய்வு நாளாகும். இறுதிப்போட்டி 18-ந்தேதி நடக்கிறது.

    நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இங்கிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.



    இந்தப்போட்டியில் விளையாடும் அணிகள் இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் தான் கோப்பையை வெல்லவில்லை. இங்கிலாந்து 2 முறை இறுதிப் போட்டியில் தோற்று இருக்கிறது. இதனால் அந்த அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் நியூசிலாந்து, வங்காளதேசத்தையும் வென்று இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

    ஏற்கனவே வென்ற அணி கோப்பையை வெல்லுமா? புதிய அணி பட்டம் பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றன.
    Next Story
    ×