என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். 2017 சீசனில் மோசமான ஆட்டம்: ஆர்.சி.பி. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விராட் கோலி
    X

    ஐ.பி.எல். 2017 சீசனில் மோசமான ஆட்டம்: ஆர்.சி.பி. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விராட் கோலி

    ஐ.பி.எல். தொடர் 2017-ல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் விராட் கோலி.
    கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பிளேஆஃப் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது.

    ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2017 சீசனில் மிகமிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பியது. இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணிக்கெதிராக 49 ரன்னில் சுருண்டு மிகவும் மோசமான சாதனையை பதிவு செய்தது.



    14-ந்தேதி (வருகிற ஞாயிற்றுக்கிழமை) டெல்லி அணிக்கெதிராக விளையாட இருக்கிறது. இதில் வெற்றி பெற்றாலும் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அணியின் கேப்டன் என்ற முறையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் விராட் கோலி மன்னிப்பு கேட்டுள்ளார்.



    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எந்தவொரு நிபந்தனையும் இல்லாத அன்பையும், ஆதரவையும் அளித்த ரசிகர்களுக்கு நன்றி. மன்னிக்கவும், நம்முடைய தரத்திற்கு ஏற்ற வகையில் தரமான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.



    அதேபோல் ஆர்.சி.பி. அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் தனது டுவிட்டரில் ‘‘ஐ.பி.எல். 2017 ஏமாற்றம். சில கடினமான பாடங்களை கற்றுக்கொண்டு, அதை அடுத்த சீசனுக்கு எடுத்துச் செல்வோம். சாம்பியன்ஸ் தொடருக்கு முன் எனது அணி வீரர்களுடன் இணைவது மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×