search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசமான பந்தாக இருந்தால் முதல் பந்தையே சிக்சருக்கு தூக்குவேன்: ரிஷப் பந்த் சொல்கிறார்
    X

    மோசமான பந்தாக இருந்தால் முதல் பந்தையே சிக்சருக்கு தூக்குவேன்: ரிஷப் பந்த் சொல்கிறார்

    பந்து வீச்சாளர் மோசமான பந்தை வீசினால், நான் சந்திக்கும் முதல் பந்தாக இருந்தாலும் அந்த பந்தை சிக்சருக்கு தூக்குவேன் என்று டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.
    ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோரின் அதிரடியால் குஜராத் அணிக்கெதிராக 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை 17.3 ஓவரில் டெல்லி அணி எட்டிப்பிடித்தது. 3-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் 6 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 43 பந்தில் 97 ரன்கள் குவித்தார். தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 31 பந்தில் 7 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்தார்.

    இருவரின் அதிரடியை கண்டு அனைவரும் பூரித்து போனார்கள். தனது அதிரடி ஆட்டம் குறித்து ரஷப் பந்த் கூறுகையில், பந்து வீச்சாளர் மோசமாக பந்தை வீசினால், அது நான் எதிர்கொள்ளும் முதல் பந்தாக இருந்தாலும் சிக்சருக்கு தூக்கி விடுவேன் என்று ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில் ‘‘பந்து அடிப்பதற்கு ஏற்ற வகையில் வந்தால், அதை நான் அடித்து விடுவேன். மோசமான பந்து வீசினால் அதற்கு நீங்கள் தண்டனை பெற்றுதான் ஆகவேண்டும். அதிகம் யோசிக்காமல் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு ராகுல் டிராவிட் என்னிடம் கூறினார். 3 ரன்கள் எடுத்து சதம் அடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. முடிந்த அளவிற்கு இலக்கு நோக்கி எட்டிச் செல்ல வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே இருந்தது’’ என்றார்.

    குஜராத் அணிக்கெதிரான தான் சந்தித்த 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் ரிஷப் பந்த். அதன்பிறகு தொடர்ந்து வாணவேடிக்கை நடத்தினார்.
    Next Story
    ×