search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெயர்ன் முனிச் வீரர் ஷபி அலோன்சாவிடம் இருந்து பந்தை தட்டிப்பறிக்க முயற்சிக்கிறார், கிறிஸ்டியானா ரொனால்டோ (வலது
    X
    பெயர்ன் முனிச் வீரர் ஷபி அலோன்சாவிடம் இருந்து பந்தை தட்டிப்பறிக்க முயற்சிக்கிறார், கிறிஸ்டியானா ரொனால்டோ (வலது

    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி அரைஇறுதிக்கு தகுதி

    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இரண்டு கால்இறுதி சுற்று முடிவின் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி 6-3 என்ற கோல் கணக்கில் பெயர்ன் முனிச்சை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
    மாட்ரிட் :

    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் மாட்ரிட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதி 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)- பெயர்ன் முனிச் (ஜெர்மனி) கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெயர்ன் முனிச் அணி 53-வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் ராபர்ட் லீவான்டோவ்ஸ்கி இந்த கோலை அடித்தார். 76-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பதில் கோல் திருப்பி சமநிலையை ஏற்படுத்தினார். 78-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி வீரர் செர்ஜியோ ரமோஸ் சுயகோல் அடித்தார்.

    இதனால் பெயர்ன் முனிச் அணி 2-1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்ட நேரம் முடிவில் பெயர்ன் முனிச் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.



    ஆனால் கால்இறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்ததால் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டின. இதனால் அரைஇறுதி வாய்ப்பு யாருக்கு என்பதை நிர்ணயிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

    கூடுதல் நேரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடுத்தடுத்து 2 கோல்கள் (105-வது மற்றும் 110-வது நிமிடம்) அடித்ததன் மூலம் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். ரியல் மாட்ரிட் அணியின் மார்கோ அசென்சியோ 112-வது நிமிடத்தில் கோல் அடித்தார். கூடுதல் நேரம் முடிவில் ரியல் மாட்ரிட் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இரண்டு கால்இறுதி சுற்று முடிவின் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி 6-3 என்ற கோல் கணக்கில் பெயர்ன் முனிச்சை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. அரைஇறுதியில் ரியல் மாட்ரிட் அணி, அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) கிளப்பை சந்திக்கிறது.
    Next Story
    ×