search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தாவுடன் இன்று மோதல்: ‘ஹாட்ரிக்’ வெற்றி ஆர்வத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்
    X

    கொல்கத்தாவுடன் இன்று மோதல்: ‘ஹாட்ரிக்’ வெற்றி ஆர்வத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்‘ வெற்றி பெறும் ஆர்வத்தில் டெல்லி அணி இருக்கிறது.
    புதுடெல்லி:

    10-வது ஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் தோற்றது. அதை தொடர்ந்து புனே, பஞ்சாப் அணிகளை வீழ்த்தியது. கொல்கத்தாவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்‘ வெற்றி பெறும் ஆர்வத்தில் டெல்லி அணி இருக்கிறது.

    அந்த அணியில் சாம்சன், ரி‌ஷப் பான்ட், கிறிஸ் மோரிஸ், சாம்பில்லிங்ஸ், கேப்டன் ஜாகீர்கான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.



    2 முறை கோப்பையை வென்ற கொல்கத்தா அணி குஜராத், பஞ்சாப், ஐதராபாத் அணிகளை வென்று இருந்தது. மும்பையிடம் தோற்று இருந்தது. டெல்லியை வீழ்த்தி 4-வது வெற்றி பெறும் வேட்கையில் கொல்கத்தா இருக்கிறது. கேப்டன் காம்பீர், உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப்பதான், சுனில்நரின் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் கொல்கத்தா 10-ல், டெல்லி 7-ல் வெற்றி பெற்றுள்ளன.

    இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் முதல் 2 ஆட்டத்தில் வென்று அடுத்த 2 ஆட்டங்களில் தோற்றன. இதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 3-வது வெற்றியை பெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.

    வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி பெங்களூர், குஜராத்தை வென்றது. மும்பை, கொல்கத்தாவிடம் தோற்றது. அந்த அணியில் கேப்டன் வார்னர், தவான், யுவராஜ்சிங், ஹென்ரிக்ஸ், ரஷீத்கான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். மேக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணி புனே, பெங்களூரை வீழ்த்தியது. கொல்கத்தா, டெல்லியிடம் தோற்றது. கேப்டன் மேக்ஸ்வெல், மில்லர், வோரா, அம்லா, போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டியில் ஐதராபாத் 6 ஆட்டத்திலும், பஞ்சாப் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
    Next Story
    ×