search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டீவன் சுமித்துடன் பயிற்சியாளர் டேரன் லீமான்.
    X
    ஸ்டீவன் சுமித்துடன் பயிற்சியாளர் டேரன் லீமான்.

    பிராட்மேன் போன்று பேட்டிங் செய்கிறார் ஸ்டீவன் சுமித்: பயிற்சியாளர் லீமான் புகழாரம்

    டான் பிராட்மேன் போன்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் பேட்டிங் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் லீமான் கூறியுள்ளார்.
    புதுடெல்லி :

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இரு அணி வீரர்கள் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. இந்திய வீரர்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் சர்ச்சைகளை கிளப்பினர். ஆஸ்திரேலிய ஊடகங்கள் விராட் கோலியை குறி வைத்து சகட்டுமேனிக்கு விமர்சித்தன.

    இதனால் அதிருப்திக்குள்ளான இந்திய கேப்டன் விராட் கோலி, ‘களத்திற்கு வெளியே ஆஸ்திரேலிய வீரர்கள் எனக்கு நல்ல நண்பர்கள் என்று முன்பு கூறியிருந்தேன். ஆனால் தொடரில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது இப்போது எனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு விட்டேன். அவர்களுடனான நட்புறவு மீட்க முடியாத அளவுக்கு இந்த தொடரில் சேதம் அடைந்து விட்டது. இனி அவர்களுடன் நட்பு பாராட்ட முடியாது’ என்றார்.

    ஆஸ்திரேலியாவுக்கு நேற்று புறப்படுவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமான் நிருபர்களிடம் கூறுகையில், ‘கோலியின் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இது தான் அவரது கருத்தா? அதே நேரத்தில் ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் இதே உணர்வுடன் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கடைசி டெஸ்டில் ரஹானேவின் கேப்டன்ஷிப் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அவர் அற்புதமாக செயல்பட்டார்’ என்றார்.



    டேரன் லீமான் மேலும் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் (3 சதத்துடன் 499 ரன்கள்) இந்த தொடரில் வியப்புக்குரிய வகையில் விளையாடினார். பேட்டிங்கில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் (டெஸ்டில் 99.94 சராசரியாக வைத்துள்ள வீரர்) போன்று ஆடுகிறார். அவரது பேட்டிங்கும், அணியை வழி நடத்தும் விதமும் மிகவும் திருப்தி அளிக்கிறது. குறிப்பாக 4 டெஸ்டில் 3 சதங்கள் நொறுக்கியது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மைக்கேல் கிளார்க், ரிக்கிபாண்டிங், ஸ்டீவ் வாக், மார்க் டெய்லர் ஆகியோரின் கேப்டன்ஷிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக ஸ்டீவன் சுமித் இருக்கிறார். கேப்டனாக தனக்கு என்று தனி அடையாளத்தை உருவாக்க கடினமாக உழைக்கிறார். அவரால் ஒவ்வொருவரும் பெருமைப்படுகிறோம்.

    கிளார்க், பாண்டிங் உள்ளிட்டோரை விட பேட்டிங்கிலும், கேப்டன்ஷிப்பிலும் பல சாதனைகளை ஸ்டீவன் சுமித் படைப்பார் என்று கருதுகிறேன். ஏனெனில் கிரிக்கெட்டை மிக ஆழமாக நேசிக்கும் அவர், சக வீரர்களுடனும் இனிமையாக பழகுகிறார். கிரிக்கெட்டுக்காக எல்லா விதத்திலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயல்படுகிறார்.

    இந்த தொடரில் நாங்கள் போதுமான அளவுக்கு நன்றாக ஆடவில்லை என்பதில் சந்தேகம் இல்லை. கடைசி டெஸ்டில் 100 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். தொடரை வெல்வதற்குரிய மிகப்பெரிய வாய்ப்பை தவற விட்டு விட்டோம். ஆனாலும் வீரர்களின் முழு முயற்சியை பாராட்டியாக வேண்டும்.

    இது இளம் வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி. முடிவு வேதனை அளித்தாலும், இந்த தொடரில் இருந்து எங்களது வீரர்கள் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இதே போல் தொடர்ந்து கற்றுக்கொண்டு, முன்னேற்றம் கண்டால் இந்த குழு நீண்ட காலத்திற்கு ஒருங்கிணைந்து விளையாட முடியும். அது தான் முக்கியம்.

    வித்தியாசமான ஆடுகளங்கள், வித்தியாசமான சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்களை மாற்றி, முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்தை எனது மகன் ரசித்து பார்க்கிறான். ஒவ்வொருவரின் மகனும் இதே ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு டேரன் லீமான் கூறினார்.

    Next Story
    ×