search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து - தெ.ஆப்ரிக்கா கடைசி டெஸ்ட்: மழையால் ஆட்டம் டிரா - தொடரை வென்றது தெ.ஆப்ரிக்கா
    X

    நியூசிலாந்து - தெ.ஆப்ரிக்கா கடைசி டெஸ்ட்: மழையால் ஆட்டம் டிரா - தொடரை வென்றது தெ.ஆப்ரிக்கா

    ஹாமில்டன் நகரில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது.
    ஹாமில்டன் :

    தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 314 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 104 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்து இருந்தது.

    கேப்டன் கனே வில்லியம்சன் 148 ரன்னுடனும், சான்ட்னெர் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய கனே வில்லியம்சன் 176 ரன்னிலும், சான்ட்னெர் 41 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் கண்ட வாட்லிங் (24 ரன்), மேட் ஹென்றி (12 ரன்), ஜீத்தன் பட்டேல் (5 ரன்), கிரான்ட்ஹோம்ப் (57 ரன்) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 162.1 ஓவர்களில் 489 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.



    தொடரை இழந்த சோகத்தில் நியூசிலாந்து வீரர்கள்

    தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் மோர்னே மோர்கல், ரபடா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். 175 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. நியூசிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சில் தொடக்க விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.

    நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து திணறியது. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று தென் ஆப்ரிக்க அணி விரைவில் ஆட்டமிழக்கும் பட்சத்தில் நியூசிலாந்து எளிதான இலக்குடன் வெற்றியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், காலை முதலே அப்பகுதியில் கனமழை பெய்து வந்ததால் ஆட்டம் தடைபட்டது. மழை விடாமல் தொடர்ந்து பெய்து வந்ததால் ஆட்டத்தின் இன்றைய நாளை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். ஓரு ஓவர் கூட வீசப்படாமல் இன்றைய நாள் முடிந்தது, இதனால், இந்த போட்டி டிரா ஆனது.



    வெற்றிக் கோப்பையுடன் தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டு பிளீசிஸ்

    இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. உள்ளூர் மண்ணில் தொடரை இழந்ததால் நியூசிலாந்து வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
    Next Story
    ×