search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரம்சாலா டெஸ்டில் ஜடேஜாவை வசைபாடிய சுமித் - மேத்யூ வேட்
    X

    தரம்சாலா டெஸ்டில் ஜடேஜாவை வசைபாடிய சுமித் - மேத்யூ வேட்

    ஆஸ்திரேலிய வீரர்கள் ஜடேஜாவை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வசைபாடினர். இது தொடர்பான வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
    தரம்சாலா டெஸ்டில் 3-வது நாளில் இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 63 ரன்கள் விளாசி, ஆஸ்திரேலிய பவுலர்களை திணறடித்தார். அவர் பேட் செய்து கொண்டிருந்த போது, ஆஸ்திரேலிய வீரர்கள் அவரை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வசைபாடினர். இது தொடர்பான வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டம்பில் உள்ள மைக்ரோ போனில் வார்த்தை பரிமாற்றம் பதிவாகியுள்ளது.

    முதலில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், ‘வெளிநாட்டில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் நீங்கள் (ஜடேஜா) ஏன் தேர்வு செய்யப்படுவதில்லை. அது ஏன்? ஏன்?’ என்று கேலியாக கேட்கிறார். ஸ்லிப்பில் நிற்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், ‘இந்திய அணி அடுத்து வெளிநாடு செல்லப்போகிறது. அதனால் இது தான் அவரது கடைசி டெஸ்ட்டாக இருக்கும்’ என்று நக்கலடிக்கிறார். தொடர்ந்து சுமித்தே, ‘இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் விளையாட நீங்கள் தகுதியற்றவர். ஏனெனில் நீங்கள் மற்ற இடங்களில் பிரயோஜனம் இல்லாதவர்’ என்று மேலும் சீண்டுகிறார்.

    இதையடுத்து மேத்யூ வேட்டை நோக்கி பேசும் ஜடேஜா, ‘இந்த டெஸ்டில் நீங்கள் தோற்றதும், நாம் இணைந்து இரவு விருந்து சாப்பிடலாம்’ என்று பதிலடி கொடுக்கிறார்.


    தொடரை இழந்த ஏமாற்றத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள்.

    இந்த விவகாரம் குறித்து பரிசளிப்பு விழாவின் போது ஜடேஜாவிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘மேத்யூ வேட் தொடர்ந்து வார்த்தை போரில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அது என்னை சிறப்பாக செயல்பட தூண்டுவதாக அமைந்தது’ என்றார்.

    மூன்றாவது நாளில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ‘கல்லி’ திசையில் நின்ற எம்.விஜய் பிடித்தார். ஆனால் தரையோடு பிடித்தது போல் ரீப்ளேயில் தெரிந்ததால் அவருக்கு நாட்-அவுட் வழங்கப்பட்டது. இதை பெவிலியனில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், ‘மோசடி பேர்வழி’ என்று கூறி ஒரு கெட்டவார்த்தையை பயன்படுத்தி திட்டினார். அவரது உதடு அசைவை வைத்து அவர் என்ன பேசினார் என்பது வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து ஸ்டீவன் சுமித்திடம் கேட்ட போது ‘இந்த தொடரில் சில நேரங்களில் உணர்ச்சிப்பெருக்கால் சில வார்த்தைகளை உதிர்த்ததுடன், சீண்டல்களிலும் ஈடுபட்டு விட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
    Next Story
    ×