search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டிலும் வெற்றிப்பயணம் நீடிக்க வேண்டும்: விராட் கோலி ஆசை
    X

    வெளிநாட்டிலும் வெற்றிப்பயணம் நீடிக்க வேண்டும்: விராட் கோலி ஆசை

    வெளிநாட்டிலும் வெற்றிப்பயணம் நீடிக்க விரும்புவதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    தரம்சாலா :

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    நாங்கள் (கோலி தலைமையில்) இதுவரை வென்ற டெஸ்ட் தொடர்களிலேயே இது தான் சிறந்த வெற்றியாகும். கடைசியாக இங்கிலாந்தை தோற்கடித்த போது, அந்த தொடர் மிக தீவிரமாக இருந்தது என்று நினைத்தேன். ஆனால் ஆஸ்திரேலிய அணி எங்களுக்கு சவால் கொடுத்த விதம் வியக்க வைத்துவிட்டது. அதே நேரத்தில் எங்களது வீரர்கள் சரிவில் இருந்து மீண்டு, தங்களது மனஉறுதியையும், உண்மையான போராட்டக்குணத்தையும் காட்டி விட்டனர்.

    ரஹானே அணியை அருமையாக வழிநடத்தினார். இந்த டெஸ்டுக்கு முன்பாக ரஹானேவிடம் நான், ‘இது உங்களது போட்டி. 4 பவுலர் தேவையா? அல்லது 5 பவுலர் தேவையா? எது உங்களுக்கு சவுகரியமாக இருக்கும்’ என்று கேட்டேன். அதற்கு அவர் 5-வது பவுலர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். இதைத் தொடர்ந்து 5-வது பவுலராக யாரை சேர்க்கலாம் என்று பயிற்சியாளர் கும்பிளேயிடம் ஆலோசித்தோம். குல்தீப் யாதவை ஆஸ்திரேலியர்களுக்கு அதிகமாக தெரியாது. அதனால் அவரை துருப்பு சீட்டாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.

    இந்த உள்ளூர் சீசனில் 13 டெஸ்டில் விளையாடி 10-ல் வெற்றி பெற்றிருப்பது என்பது பெருமைமிக்க தருணமாகும். எல்லா சீசனிலும் நாங்கள் சிறந்த கிரிக்கெட் ஆடுகிறோம். குறிப்பாக சொந்த நாட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளோம்.

    உலகின் ‘நம்பர் ஒன்’ அணியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் பிரதான சவால் இப்போது தான் தொடங்குகிறது. இதே போன்று வெளிநாட்டிலும் வெற்றிகளை குவிக்கும் போது தான், எனது முகத்தில் நீங்கள் (நிருபர்கள்) அதிகமான சிரிப்பை காண முடியும்.

    இவ்வாறு கூறினார்.

    இந்த தொடருக்கு முன்பாக பேட்டி அளித்த விராட் கோலி, ‘மைதானத்துக்கு வெளியே அனைத்து வீரர்களிடமும் நட்புறவுடன் இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.



    ஆனால் மிதமிஞ்சிய விமர்சனங்கள், வார்த்தை யுத்தம், உரசல்கள் என்று சர்ச்சைகளோடு தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், ‘இப்போதும் ஆஸ்திரேலிய வீரர்களுடன் நட்புறவுடன் இருப்பதாக கருதுகிறீர்களா?’ என்று விராட் கோலியிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த கோலி ‘ஆஸ்திரேலிய வீரர்கள் உடனான நட்புறவு முன்பு போல் இப்போது இல்லை. டெஸ்ட் தொடருக்கு பிறகு அது முற்றிலும் மாறி விட்டது. தொடருக்கு முன்பு நான் தெரிவித்து இருந்த கருத்தும் தவறாகி விட்டது. நட்புறவு குறித்து இனி நான் பேசப்போவதில்லை’ என்றார்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில், ‘தொடருக்கு முன்பாக நாங்கள் 0-4 என்ற கணக்கில் தோற்போம் என்று நிறைய பேர் சொன்னார்கள். ஆனால் அதை மாற்றிக்காட்டியதுடன், ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் எங்களது வீரர்கள் பலமான சவால் கொடுத்து மல்லுகட்டி நின்றனர். அதை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

    தரம்சாலா டெஸ்டில் ஒரு கட்டத்தில் 1-130 ரன் என்று வலுவான நிலையில் இருந்து, அதன் பிறகு 300 ரன்களில் ஆல்-அவுட் ஆனது ஏமாற்றம் அளிக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி 400 முதல் 450 ரன்கள் வரை எடுத்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.

    இந்திய வீரர்கள் ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள். தேவைப்படும் போது தடுப்பாட்டத்திலும் கவனம் செலுத்துகிறார்கள். வித்தியாசமான சூழ்நிலையில் எப்படி கையாள வேண்டும் என்பதை இந்திய அணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்’ என்றார்.

    இந்திய அணியின் பயிற்சியாளர் கும்பிளே கூறுகையில், ‘தொடர் முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர். குறிப்பாக 3-வது நாளில் உமேஷ் யாதவும், புவனேஷ்வர்குமாரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் குடைச்சல் கொடுத்தனர். அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை அளித்தனர். இதே போல் வெளிநாட்டிலும் எங்களால் ஏன் வெற்றி முடியாது?’ என்றார்.
    Next Story
    ×