search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவை 333 ரன்னில் தோற்கடித்த ஓகீபேக்கு தரம்சாலா டெஸ்டில் இடமில்லை?
    X

    இந்தியாவை 333 ரன்னில் தோற்கடித்த ஓ'கீபேக்கு தரம்சாலா டெஸ்டில் இடமில்லை?

    புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவை 333 ரன்னில் தோற்கடிக்க காரணமாக இருந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபேக்கு இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நான்காவது மற்றும் கடைசி போட்டி தரம்சாலாவில் நாளைமறுநாள் (25-ந்தேதி) தொடங்குகிறது.

    இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும். போட்டி டிராவில் முடிந்தால் தொடர் 1-1 என சமநிலையில் முடியும்.

    புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

    முதல் இன்னிங்சில் இந்தியா 105 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னி்ங்சில் 107 ரன்னில் சுருண்டது. இரு இன்னிங்சிலும் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே தலா 6 விக்கெட்டுக்கள் என 12 விக்கெட்டுக்கள் அள்ளினார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

    பெங்களூருவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்துக்கும், வேகப்பந்துக்கும் சமஅளவில் ஒத்துழைத்த இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    ராஞ்சியில் நடைபெற்ற போட்டி டிராவில் முடிந்தது. இதில் முதல் இன்னிங்சில் ஓ'கீபே 77 ஓவர்கள் வீசி 199 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்தியா 2-வது இன்னிங்ஸை விளையாட வில்லை.

    இந்நிலையில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் வருகிற சனிக்கிழமை (மார்ச் 25) தொடங்குகிறது. எப்பொழுதுமே தரம்சாலா கிரிக்கெட் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் இருக்கும். ஆடுகள பராமரிப்பாளரும் இந்த கருத்தைதான் வலியுறுத்தியுள்ளார்.



    இதனால் இரு அணியும் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் முனைப்பு காட்டும். ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்க் காயம் காரணமாக வெளியேறியதால் மேக்ஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த அணியில் தற்போது ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள்தான் உள்ளனர். ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என்பதால் ஓ'கீபே அல்லது மேக்ஸ்வெல் ஆகியோரில் ஒருவரை நீக்க வேண்டும்.

    மேக்ஸ்வெல் கடந்த போட்டியில் சதம் அடித்துள்ளார். மேலும் மேக்ஸ்வெல் பேட்டிங்கில் பலம் வாய்ந்தவர். தேவையென்றால் சுழற்பந்து வீச்சாளராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் ஓ'கீபேக்கு பதிலாக இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் ஜேக் பேர்ட் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவை 333 ரன்னில் தோற்கடிக்க காரணமாக இருந்தவருக்கும், இந்த தொடரில் 18 விக்கெட்டுக்கள் வீத்தியவருக்கும் அணியில் இடம்கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×