search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 இன்னிங்சில் 131 ரன் மட்டுமே: பழைய நிலைமைக்கு திரும்புவேன்- வார்னர் நம்பிக்கை
    X

    6 இன்னிங்சில் 131 ரன் மட்டுமே: பழைய நிலைமைக்கு திரும்புவேன்- வார்னர் நம்பிக்கை

    இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்சில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள வார்னர், மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவேன் என்று கூறியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மூலம் 1-1 என சமநிலையில் உள்ளது. ராஞ்சியில் நேற்றுடன் முடிவடைந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்த தொடர் தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலியா அணி துபாய் சென்ற இந்திய மண்ணில் சிறப்பாக விளையாட தீவிர பயிற்சி எடுத்துக் கொண்டது. ‘இந்த தொடரில் எங்களது அணியின் தொடக்க வீரர் வார்னர் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். சென்னை டெஸ்டில் கருண் நாயர் முச்சதம் அடித்ததுபோல், வார்னர் முச்சதம் அடிக்க வாய்ப்புள்ளது’ என அந்த அணியின் கேப்டன் ஸ்மித் கூறினார்.

    ஆனால், வார்னர் 6 இன்னிங்சில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 38 ரன்கள் எடுத்துள்ள அவரின் சராசரி 21.83 ஆகும். ராஞ்சியில் இரண்டு இன்னிங்சிலும் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். முதல் இரண்டு டெஸ்டில் மூன்று இன்னிங்சில் அஸ்வின் பந்தில் வீழ்ந்தார். அவர் சுழற்பந்தை சமாளிக்க திணறி வருகிறார்.

    ஆனால் இதைப்பற்றி கவலைப் படாமல், யாராக இருந்தாலும் இதுபோன்ற நிலைமை வரத்தான் செய்யும். இந்த மோசமான ஆட்டத்தில் இருந்து திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து வார்னர் கூறுகையில் ‘‘உலக கிரிக்கெட்டில் சிறந்த வீரர்கள், ஜாம்பவான்கள் என்று யாராக இருந்தாலும், சொந்த மண்ணில் அல்லது வெளிநாட்டு மண்ணில் இதுபோன்று சில நேரங்களில் பாஃர்மின்றி தவிப்பார்கள். கிரிக்கெட்டில் இது சகஜம்.



    நான் சிறந்த வகையில் பந்தை அடிக்கவில்லை. அதனால் இந்த தருணத்தில் என்னால் அதிக ரன்கள் குவிக்க இயலவில்லை. அந்த நேரம் வரும்போது, ரன் குவிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தற்போது வரை என்னுடைய வழக்கமான பயிற்சியைதான் மேற்கொண்டு வருகிறேன்’’ என்றார்.

    இந்திய தொடருக்கு முன் வார்னர், சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி இரண்டு டெஸ்டில் 144, 113 ரன்கள் (அவுட்டில்லை) விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×