search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஞ்சி டெஸ்ட்: கோலி, ரகானே, கருண் நாயர் ஏமாற்றம்; சதமடித்து போராடும் புஜாரா
    X

    ராஞ்சி டெஸ்ட்: கோலி, ரகானே, கருண் நாயர் ஏமாற்றம்; சதமடித்து போராடும் புஜாரா

    ராஞ்சி டெஸ்டில் விராட் கோலி, ரகானே மற்றும் கருண் நாயர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். புஜாரா சதம் அடித்து போராடி வருகிறார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 451 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 42 ரன்னுடனும், புஜாரா 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முரளி விஜய் அரைசதம் கடந்தார். புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மதிய உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரில் முரளி விஜய் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அத்துடன் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

    அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 40 ரன்னுடன் களத்தில் இருந்தார். பின்னர் மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. காயம் காரணமாக பீல்டிங் செய்ய வராமல் இருந்த விராட் கோலி களம் இறங்கினார்.


    ஸ்டம்பிங் ஆகிய முரளி விஜய்

    புஜாரா 155 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய விராட் கோலி 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து ரகானே களம் இறங்கினார். அரைசதம் அடித்த பின்னர் புஜாரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. புஜாரா ஒருபுறம் நிலைத்து நிற்க மறுமுனையில் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன.

    ரகானே 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு வந்த கருண் நாயர் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதற்கிடையே புஜாரா தனது 11-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.


    கோலி, ரகானே விக்கெட்டுக்களை வீழ்த்திய கம்மின்ஸ்

    தற்போது 6-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்துள்ளார். இந்திய அணி 112 ஓவர்கள் முடிந்த நிலையில் 322 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 129 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த ஜோடி இணைந்து 50 ரன்களுக்கு மேல் எடுத்தால் இந்தியாவிற்கு உதவியாக இருக்கும். முக்கியமாக அஸ்வின் களத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது அவசியம்.
    Next Story
    ×