search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்:  8 வி்க்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி
    X

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 8 வி்க்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி

    வெலிங்கடனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 8 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    வெலிங்டன்:

    தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 16-ந்தேதி (வியாழக்கிழமை) வெலிங்டனில் தொடங்கியது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது. டுமினியின் சுழற்பந்தில் சிக்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 268 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. டுமினி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 349 ரன் எடுத்து இருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா 359 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. 94 ரன்கள் எடுப்பதற்குள் 6 வி்க்கெட்டுக்களை இழந்து திணறிய தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 300 ரன்னை தாண்டுவதற்கு குயிண்டன் டி காக் (91), பவுமா (89) முக்கிய காரணமாக இருந்தனர்.



    91 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை விளையாடியது. தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகாராஜ் பந்தில் 171 ரன்னில் சுருண்டது. மகாராஜ் 20.2 ஓவர்கள் வீசி 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் அள்ளினார். மோர்னே மோர்கல் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜீத் ராவல் மட்டுமே தாக்குபிடித்து 80 ரன்கள் சேர்த்தார்.

    நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 80 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றதால், தென்ஆப்பிரிக்காவுக்கு 81 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    81 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 24.3 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 83 ரன்கள் சேர்த்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்திய மகராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஹாமில்டனில் 25-ந்தேதி தொடங்குகிறது. இதில் நியூசிலாந்து கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இல்லையெனில் தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றிவிடும்.
    Next Story
    ×