search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி.
    X
    அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி.

    20 ஓவர் கிரிக்கெட்டில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்: முகமது நபி சாதனை

    20 ஓவர் கிரிக்கெட்டில் அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் தனது வெற்றிப்பயணத்தை நீட்டித்துள்ளது. 7-வது வரிசையில் இறங்கி பட்டைய கிளப்பிய முகமது நபி 9 சிக்சருடன் 89 ரன்கள் விளாசி புதிய சாதனை படைத்தார்.
    புதுடெல்லி :

    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையே சர்வதேச கிரிக்கெட் தொடர் பொதுவான இடமான உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி அங்கு நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி ரன்மழை பொழிந்தது. விக்கெட் கீப்பர் முகமது ஷாசாத் 72 ரன்களும் (43 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), 7-வது வரிசையில் ஆடிய முகமது நபி 89 ரன்களும் (30 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) நொறுக்கி மலைக்க வைத்தனர்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது. 20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஒட்டுமொத்த அதிகபட்ச பட்டியலில் இந்த ஸ்கோர் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

    அடுத்து ஆடிய அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் 205 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.



    இந்த ஆட்டத்தில் செய்யப்பட்ட சாதனைகள் வருமாறு:-

    * கடைசி 6 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 104 ரன்கள் திரட்டியது. 20 ஓவர் போட்டியில் கடைசி 6 ஓவர்களில் ஒரு அணி 100 ரன்களுக்கு மேல் விளாசியது இதுவே முதல் முறையாகும்.

    * முகமது ஷாசாத் 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலியை (1,709 ரன், 48 ஆட்டம்) பின்னுக்கு தள்ளிவிட்டு 4-வது இடத்துக்கு முன்னேறினார். முகமது ஷாசாத் இதுவரை 1,779 ரன்கள் (58 ஆட்டம்) எடுத்துள்ளார். முதல் 3 இடங்களில் நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லம் (2,140 ரன்), இலங்கையின் தில்ஷன் (1,889 ரன்), நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (1,806 ரன்) ஆகியோர் உள்ளனர்.

    * 6 மற்றும் அதற்கு கீழ்வரிசையில் இறங்கி ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனைக்கு முகமது நபி (89 ரன்) சொந்தக்காரர் ஆகியுள்ளார். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு உலக கோப்பையின் போது, இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் கேமரூன் ஒயிட் 6-வது வரிசையில் 85 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    * 21 பந்துகளில் அரைசதத்தை கடந்த முகமது நபி, அதிவேகமாக அரைசதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

    20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் வென்று வரலாறு படைத்துள்ள ஆப்கானிஸ்தான் அடுத்து அயர்லாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.
    Next Story
    ×