search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலிக்கு எந்த சவாலும் இல்லை; பெங்களூரில் ஜொலிப்பார்- ஹர்பஜன் சிங்
    X

    கோலிக்கு எந்த சவாலும் இல்லை; பெங்களூரில் ஜொலிப்பார்- ஹர்பஜன் சிங்

    புனே தோல்வியால் விராட் கோலிக்கு எந்த சவாலும் இல்லை, பெங்களூர் டெஸ்டில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 105 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 107 ரன்னிலும் சுருண்டது. முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன இந்திய அணி கேப்டன் விராட் கோலி, 2-வது இன்னிங்சில 13 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    இந்த தோல்வியின் மூலம் டெஸ்ட் தொடரில் இந்தியா 0-1 என பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த பின்தங்கிய நிலை பேட்ஸ்மேன் மட்டுமல்லாமல், கேப்டனாகவும் விராட் கோலிக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார்.



    இதற்கு இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு எந்தவொரு சவாலும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.



    மேலும் ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘விராட் கோலி ஒரு சாம்பியன் பேட்ஸ்மேன். ஒவ்வொரு நேரமும் அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தி, சவாலை அவர் மீது திணித்தால், அதை எதிர்கொண்டு முறியடித்து விடுவார். பெங்களூரில் அவர் அதிக அளவில் ரன்கள் குவிப்பார் என்பதை உறுதியாக கூறுகிறேன். இந்திய அணியின் பேட்டிங்கில் அவர் முதுகெலும்பு. திறமைக்கு சொந்தக்காரரான அவருக்கு, அதுவே தானாக பெங்களூரில் அதிக ரன்கள் குவிக்க வைக்கும்.

    புனே போன்ற ஆடுகளத்தில் டாஸ் முக்கியமானது. டாஸ் ஜெயித்தாலே பாதி வெற்றியை பெற்றதற்கு சமம். இதேபோல் ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும். இருந்தாலும், அஸ்திரேலியா சிறப்பாக விளையாடியது. போட்டி ஐந்து நாட்கள் சென்றிருந்தால் இந்திய அணிக்கு சாதகமாக இருந்திருக்கும்’’ என்றார்.

    2011-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்து விளையாடும்போது நான்கு டெஸ்டில் 32 விக்கெட்டுக்கள் அள்ளியவர் ஹர்பஜன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×