search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளிப்பதக்கம் வென்ற அங்குர் மிட்டல்.
    X
    வெள்ளிப்பதக்கம் வென்ற அங்குர் மிட்டல்.

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அங்குர் மிட்டல்

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    புதுடெல்லி :

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான டபுள் டிராப் பந்தயத்தில் 20 வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இதன் தகுதி சுற்றில் இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஸ்காட் 139 புள்ளியும், ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் வில்லெட் 138 புள்ளியும், இந்திய வீரர்கள் சங்ராம் தாஹியா 138 புள்ளியும், அங்குர் மிட்டல் 137 புள்ளியும், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெட்மான் 137 புள்ளியும், இத்தாலி வீரர் அலெக்சாண்ட்ரோ 137 புள்ளியும் எடுத்து முறையே முதல் 6 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள்.

    இறுதிப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் வில்லெட் 75 புள்ளிகள் குவித்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 74 புள்ளிகள் சேர்த்த 24 வயதான இந்திய வீரர் அங்குர் மிட்டல் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெட்மான் 56 புள்ளிகள் திரட்டி வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.


    10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஹீனா சித்து, ஜிதுராய் இணையை படத்தில் காணலாம்.

    தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஸ்காட் இறுதிப்போட்டியில் 46 புள்ளிகள் சேர்த்ததால் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இத்தாலி வீரர் அலெக்சாண்ட்ரோ 36 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தை பெற்றார். தகுதி சுற்றில் 3-வது இடத்தை பெற்ற இந்திய வீரர் சங்ராம் தாஹியா இறுதிப்போட்டியில் 24 புள்ளிகள் சேர்த்து 6-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

    10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜிதுராய்-ஹீனா சித்து இணை 5-3 என்ற புள்ளிகணக்கில் ஜப்பானின் யுகாரி கோனிஷி- தமோயுகி மெட்சுடா ஜோடியை சாய்த்து தங்கப் பதக்கத்தை வென்றது. தோல்வி கண்ட ஜப்பான் இணை வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. சுலோவேனியாவின் நாப்ஹாஸ்வான்- கெவின் வென்டா ஜோடி வெண்கலப்பதக்கம் பெற்றது.

    கலப்பு அணிகள் பிரிவு பந்தயம் உலக கோப்பை போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் செயற்குழு மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் அங்கீகாரத்துக்கு பின்னரே இந்த கலப்பு அணிகள் பிரிவு பந்தயம் அதிகாரபூர்வமாகும்.

    இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற 3-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா காட்கர் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.
    Next Story
    ×