search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனை சூப்பர் சீரிஸ் தொடர் போன்றே நினைக்கிறேன்: பி.வி.சிந்து
    X

    ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனை சூப்பர் சீரிஸ் தொடர் போன்றே நினைக்கிறேன்: பி.வி.சிந்து

    ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியை பொறுத்தவரை வழக்கமான சூப்பர் சீரிஸ் தொடர்களை போன்றே நினைப்பதாக பி.வி.சிந்து பேட்டியளித்துள்ளார்.
    புதுடெல்லி :

    ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பர்மிங்காமில் நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகி வரும் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய சாதனையாளரான பி.வி.சிந்து முதல் சுற்றில் டென்மார்க்கின் மெட்டி போல்சனை சந்திக்கிறார். இதையொட்டி பி.வி.சிந்து நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் பெயரை வைத்து அதை மிகப்பெரிய போட்டியாக மக்கள் நினைக்கலாம். என்னை பொறுத்தவரை இதை வழக்கமான சூப்பர் சீரிஸ் தொடர்களை போன்றே பாவிக்கிறேன். சூப்பர் சீரிஸ் போட்டிகளில் எதிர்த்து விளையாடிய அதே வீராங்கனைகளுடன் தான் ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனிலும் மோத உள்ளேன். வேறு எந்த வித்தியாசமும் இல்லை. இந்த போட்டிக்காக நான் சிறப்பாக தயாராகி வருகிறேன். ஆண்களுடன் இணைந்து பயிற்சி எடுக்கிறேன். இது எனக்கு உதவிகரமாக இருக்கிறது.



    தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளேன். இந்த ஆண்டு இறுதிக்குள் 3-வது இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. அதற்காக கடினமாக உழைக்கிறேன். இந்த ஆண்டில் நிறைய போட்டிகள் வருகின்றன. இதில் எந்ததெந்த போட்டிகளில் நான் விளையாட வேண்டும் என்பதை எனது பயிற்சியாளர் முடிவு செய்வார்.

    இவ்வாறு சிந்து கூறினார்.

    ஆல்-இங்கிலாந்து பட்டத்தை இதுவரை இந்தியர்களில் கோபிசந்த், பிரகாஷ் படுகோனே ஆகியோர் மட்டுமே வென்று இருக்கிறார்கள். சாய்னா நேவால் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, ஆந்திர மாநில அரசு சிந்துவுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க முன் வந்தது. அதை சிந்து இப்போது ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இதன்படி சிந்து விரைவில் துணை கலெக்டராக நியமிக்கப்பட இருக்கிறார்.
    Next Story
    ×