search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் புனேயில் இன்று தொடக்கம்
    X

    இந்தியா - ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் புனேயில் இன்று தொடக்கம்

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
    புனே :

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.

    இலங்கை (2-1), தென்ஆப்பிரிக்கா (3-0), வெஸ்ட் இண்டீஸ் (2-0), நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (4-0), வங்காளதேசம் (1-0) ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர் களை தொடர்ச்சியாக கைப்பற்றிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவையும் புரட்டியெடுக்க முழுவீச்சில் ஆயத்தமாக உள்ளது. உள்ளூரில் அசைக்க முடியாத அணியாக கம்பீர நடை போடும் இந்திய அணி கடைசியாக விளையாடிய 19 டெஸ்டுகளில் தோல்வி பக்கமே செல்லவில்லை. அத்துடன் உள்ளூரில் நடப்பது இந்தியாவுக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும்.

    ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் இந்திய கேப்டன் விராட் கோலி கடந்த 13 டெஸ்டுகளில் 1,457 ரன்கள் சேர்த்து பிரமிக்க வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் அதிரடியை வெளிப்படுத்தும் வேட்கையில் அவர் இருக்கிறார். புஜாரா, லோகேஷ் ராகுல், முரளிவிஜய், ரஹானே, விருத்திமான் சஹா ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஐ.சி.சி. தரவரிசையில் முதல் இரு இடங்களை வகிக்கும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கூட்டணி தான் இந்த தொடரின் துருப்பு சீட்டு என்றால் அது மிகையல்ல. இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது அஸ்வின் 28 விக்கெட்டுகளும், ஜடேஜா 26 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

    தற்போதைய தொடருக்கான ஆடுகளங்களும் சுழற்பந்து வீச்சுக்கு உகந்த வகையிலேயே இருக்கும் என்பதால், இவர்கள் தான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். இவர்களோடு சேர்ந்து ஜெயந்த் யாதவ் 3-வது சுழற்பந்து வீச்சாளராக தாக்குதல் தொடுப்பார் என்று தெரிகிறது.


    பயிற்சியில் இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் விராட் கோலி.

    ஆஸ்திரேலிய அணி 2013-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து விளையாடிய 4 டெஸ்டுகளிலும் படுதோல்வி அடைந்தது. அது மட்டுமின்றி கடைசியாக ஆசிய கண்டத்தில் விளையாடிய 9 டெஸ்டுகளில் மண்ணை கவ்வியிருக்கிறது. ஆசியாவில் அடிமேல் அடி வாங்கி வரும் அந்த அணி இந்த முறை சோகத்துக்கு முடிவு கட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

    ஆஸ்திரேலிய அணி ஓரளவு சரிசம பலத்துடனேயே காணப்படுகிறது. இருப்பினும் ‘நம்பர் ஒன் பேட்ஸ்மேன்’ கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் தான் அந்த அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார்கள். இவர்கள் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே அந்த அணியின் ஸ்கோர் அமையும். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் ‘ஸ்விங்’ மூலம் மிரட்ட முயற்சிப்பார்கள்.

    எப்படி என்றாலும், இந்திய சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளித்தால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் எழுச்சி பெற முடியும். அதற்கு தகுந்தார் போல் ஆட்ட அணுகுமுறையை திட்டமிட்டுள்ளனர். அது களத்தில் எந்த அளவுக்கு கைகொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இந்த தொடரில் ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றால் போதும் இந்திய அணி ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துக் கொள்ளும். அதே சமயம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடத்தை அபகரிக்க, 3-0 அல்லது 4-0 என்ற கணக்கில் வென்றாக வேண்டும்.

    புனே மைதானத்தில் இதுவரை இரண்டு ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இங்கு டெஸ்ட் போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். இது இந்தியாவின் 25-வது டெஸ்ட் மைதானமாக இருக்கும்.

    ஆடுகளத்தன்மை வேகமின்றி (ஸ்லோ) இருக்கும். 2-வது நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சு எடுபடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    2008-ம் ஆண்டு தொடரின் போது ஹர்பஜன்சிங், ஆஸ்திரேலியாவின் சைமண்ட்சை குரங்கு என்று திட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் இருந்து இந்தியா-ஆஸ்திரேலியா மோதல் என்றாலே ஒரு வித பகைமை உணர்வோடு பார்க்கும் நிலை உருவாகி விட்டது. அது தான் ரசிகர்களின் ஆவலையும் தூண்டுகிறது. இன்றைய போட்டியிலும் அத்தகைய எதிர்பார்ப்புக்கும் பஞ்சமில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: லோகேஷ் ராகுல், எம்.விஜய், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, அஸ்வின், விருத்திமான் சஹா, ஜெயந்த் யாதவ், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா.

    ஆஸ்திரேலியா: மேத்யூ ரென்ஷா, டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவ் ஓ கீபே, நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
    Next Story
    ×