search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது போட்டியில் வெற்றி: தென் ஆப்பிரிக்காவின் வெற்றிப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது நியூசிலாந்து
    X

    2-வது போட்டியில் வெற்றி: தென் ஆப்பிரிக்காவின் வெற்றிப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது நியூசிலாந்து

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவின் தொடர் வெற்றிக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.
    கிறிஸ்ட்சர்ச்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இருந்தது. 5 ஒருநாள் போட்டியில் முதல் ஆட்டத்திலும் அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது.

    இந்நிலையில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, கேப்டன் வில்லியம்சன், முன்னாள் கேப்டன் டெய்லர், நீஷம் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது. துவக்க வீரர் புரோன்லி 34 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 69 ரன்களும் எடுத்தனர். ஜேம்ஸ் நீசம் 57 பந்தில் 71 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார்.

    டெய்லர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 110 பந்துகளில் 102 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். 180-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய டெய்லருக்கு இது 17-வது சதமாகும்.

    இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதம் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை டெய்லர் பெற்றார். அந்நாட்டு வீரர் ஆஸ்லே 16 செஞ்சூரி அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

    இதையடுத்து 290 ரன் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. குயின்டன் டி காக் 57 ரன்களும், கேப்டன் டிவில்லியர்ஸ் 45 ரன்களும், டுமிடினி 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான நிலையில், பிரிட்டோரியஸ்-பெலுக்வாயோ களத்தில் இருந்தனர்.

    19-வது ஓவரில் நெருக்கடிக்கு மத்தியிலும் அரை சதம் அடித்தார் பிரிட்டோரியஸ். அதனால், அவர் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி பெறச் செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஓவரின் கடைசி பந்தில் அவர் போல்ட் பந்தில் விக்கெட்டை இழந்தார். அவர் சரியாக 50 ரன்கள் எடுத்தார்.

    எனவே, தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை யார்க்கராக வீசி திணறடித்தார் சவுத்தி.


    இதனால் முதல் 4 பந்துகளை கோட்டைவிட்ட பெலுக்வாயோ, கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரிகள் அடித்தார். இதன்மூலம், அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்களே எடுத்தது.

    எனவே, நியூசிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், தொடர்ந்து 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள தென் ஆப்பிரிக்காவின் சாதனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. டெய்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    Next Story
    ×