search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபடி போட்டியில் புதுச்சேரி அணி வீரரை, கர்நாடகா அணி வீரர்கள் மடக்கி பிடிக்க முயன்ற காட்சி.
    X
    கபடி போட்டியில் புதுச்சேரி அணி வீரரை, கர்நாடகா அணி வீரர்கள் மடக்கி பிடிக்க முயன்ற காட்சி.

    தென் மண்டல கபடி போட்டி: தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி

    அகஸ்தியர்பட்டியில் நேற்று நடந்த தென் மண்டல கபடி போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
    விக்கிரமசிங்கபுரம் :

    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டியில் 64-வது தென் மண்டல கபடி போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவில் நடந்த லீக் ஆட்டத்தின் முடிவில் கர்நாடகா அணி 2 புள்ளிகளையும், கேரள அணி 2 புள்ளிகளையும் பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு பிரிவில் நடந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 4 புள்ளிகளையும், புதுச்சேரி அணி ஒரு புள்ளியையும் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    3-வது நாளான நேற்று மாலை அரையிறுதி ஆட்டம் நடந்தது. இந்த ஆட்டத்தை காண்பதற்காக விக்கிரமசிங்கபுரம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர். ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துடன் போட்டி தொடங்கியது. முதலாவதாக கர்நாடகா அணியும், புதுச்சேரி அணியும் விளையாடின. இதில் கர்நாடகா அணி 11 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. கர்நாடகா அணி 43 புள்ளிகளும், புதுச்சேரி அணி 32 புள்ளிகளையும் பெற்றிருந்தன.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணியும், கேரள அணியும் விளையாடின. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரசிகர்கள் கைதட்டி தமிழக அணியை பெரிதும் உற்சாகப்படுத்தினர். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. தமிழ்நாடு அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர்.

    ஆட்டத்தின் முடிவில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. தமிழ்நாடு அணி 34 புள்ளிகளையும், கேரள அணி 32 புள்ளிகளையும் எடுத்திருந்தது.

    பெண்கள் பிரிவில் கேரள அணியும், தெலுங்கானா அணியும் மோதின. இதில் கேரள அணி 33 புள்ளிகளும், தெலுங்கானா அணி 23 புள்ளிகளும் எடுத்தன. மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு அணியும், கர்நாடகா அணியும் மோதிக் கொண்டதில், கர்நாடகா அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அதனை தொடர்ந்து 40 மற்றும் 50 வயது மேற்பட்டவர்களுக்கான கபடி போட்டி நடந்தது. இதில் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த முன்னாள் கபடி வீரர்கள் பலர் கலந்துகொண்டு விளையாடினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கபடி கழக தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் பரிசு வழங்கினார்.

    முன்னதாக, மதுரை கால்பந்தாட்ட கழக செயலாளர் சீனி முகம்மது, அனைத்திந்திய கபடி கழக இணை செயலாளர் சபியுல்லா ஆகியோர் அரையிறுதி போட்டியை தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா தலைமை தாங்கினார். நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சிங்கை ஸ்போர்ட்ஸ் லவ்வர்ஸ் கிளப் தலைவர் சேகர் மனோகர் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் மனோகரன் சாமுவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் சிங்கை ஸ்போர்ட்ஸ் லவ்வர்ஸ் கிளப் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×