search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய பிரதிநிதிகளாக 3 பேர் பங்கேற்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு
    X

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய பிரதிநிதிகளாக 3 பேர் பங்கேற்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு

    ஐ.சி.சி.கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகளாக 3 பேர் கலந்து கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கூட்டம் துபாயில் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) பிரதிநிதிகளாக அமிதாப் சவுத்ரி, அனிருத் சவுத்ரி (இருவரும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள்), ஐ.டி.எப்.சி. நிர்வாக இயக்குனர் விக்ரம் லிமாயே (சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்) ஆகியோர் கலந்து கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது.

    ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஐ.சி.சி.கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியாக விக்ரம் லிமாயே மட்டுமே பங்கேற்க முடியும் என்று கடைசி நேரத்தில் தெரிவித்தார். இதனை அடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ஐ.சி.சி. கூட்டத்தில் ஒரு நபரை (விக்ரம் லிமாயே) மட்டுமே அனுமதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கோர்ட்டு தலையிட்டு 3 பேரும் பங்கேற்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

    இந்திய கிரிக்கெட் வாரிய புதிய நிர்வாகிகள் நியமன விஷயத்தில் கோர்ட்டுக்கு உதவிகரமாக செயல்பட்ட வக்கீல் கோபால் சுப்பிரமணியம் வாதிடுகையில், ‘சுப்ரீம் கோர்ட்டு நியமித்த 3 பேரையும் ஐ.சி.சி.கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று புதிய நிர்வாக கமிட்டி சார்பில் ஐ.சி.சி. தலைவர் ஷசாங் மனோகருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இ-மெயிலில் 3 பேரும் பங்கேற்க பரிசீலனை செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்’ என்றார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘ஐ.சி.சி.கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அங்கீகாரம் அளித்த 3 பேரும் ஒரே மாதிரியான அந்தஸ்து படைத்தவர்கள். அவர்கள் மூவரும் ஐ.சி.சி. கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்’ என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×