search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் 24-ந் தேதி அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட்டு முடிவு
    X

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் 24-ந் தேதி அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட்டு முடிவு

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் யார்? என்பதை சுப்ரீம் கோர்ட்டு வருகிற 24-ந் தேதி அறிவிக்க முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் யார்? என்பதை சுப்ரீம் கோர்ட்டு வருகிற 24-ந் தேதி அறிவிக்க முடிவு செய்துள்ளது. மேலும் நிர்வாகிகள் பதவி காலம் குறித்த முந்தைய உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் வாரியம் நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த தாமதம் செய்ததுடன், கோர்ட்டுக்கு தவறான தகவலை தெரிவித்ததற்காக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை கடந்த 2-ந் தேதி பதவியில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

    பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் வாரியத்தை நடத்த தகுதியான நிர்வாகிகளை தேர்வு செய்து பட்டியலை அளிக்கும்படி அனில் திவான், கோபால் சுப்பிரமணியம் ஆகிய வக்கீல்களை சுப்ரீம் கோர்ட்டு பணித்து இருந்தது. அதன்படி இருவரும் 9 பேர் கொண்ட நிர்வாகிகளை பட்டியலை தேர்வு செய்து சீல் வைக்கப்பட்ட கவரில் கோர்ட்டில் சமர்பித்துள்ளனர்.

    இந்த நிர்வாகிகள் பட்டியலில் இருந்து சரியான நபரை தேர்வு செய்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவிக்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் லோதா கமிட்டி பரிந்துரைகள் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகிய இரண்டிலும் சேர்த்து 9 வருடம் பதவி வகித்தவர்கள் மீண்டும் பதவிக்கு வர தகுதி படைத்தவர்கள் அல்ல என்று முன்பு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்வதாக அறிவித்தனர். இதன்படி மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்தில் 9 ஆண்டு கால பதவி வரம்பு என்பது ஒட்டுமொத்தமாக கணக்கில் கொள்ளப்படாது என்று தெரிவித்தனர். அதாவது ஒருவர் மாநில கிரிக்கெட் சங்கத்தில் 9 ஆண்டுகள் பதவியில் இருந்தாலும், இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் இதே காலத்துக்கு பதவி வகிக்க முடியும்.

    மேலும் வருகிற 24-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அன்று புதிய நிர்வாகிகளை அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது. அத்துடன் ரெயில்வே, சர்வீசஸ், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு மீண்டும் முழு உறுப்பினர்கள் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட வேண்டுகோள் கருத்தில் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபல் வாதிடுகையில், ‘சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்படும் நிர்வாகிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் பெரிய அளவிலான நிதி விஷயங்களில் திறம்பட கையாள்வது என்பது கடினமான விஷயமாகும். புதிய நிர்வாகிகள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அளிக்கிறோம். அதில் இருந்து சரியான நபரை நீங்கள் தேர்வு செய்து அறிவியுங்கள்’ என்று வற்புறுத்தினார்.

    Next Story
    ×