search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது ஒருநாள் கிரிக்கெட்: யுவராஜ், டோனி சதத்தால் இந்தியா 381 ரன்கள் குவிப்பு
    X

    2-வது ஒருநாள் கிரிக்கெட்: யுவராஜ், டோனி சதத்தால் இந்தியா 381 ரன்கள் குவிப்பு

    யுவராஜ் சிங் மற்றும் டோனி ஆகியோரின் அபார சதத்தால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 14 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. 3-வது ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ராகுல், பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 5 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    அடுத்து விராட் கோலி தவான் உடன் ஜோடி சேர்ந்தார். அதே ஓவரில் 2-வது மற்றும் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி, கடைசி பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய தவானும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 5-வது ஓவரின் 4-வது பந்தில் தவான் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டானார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் வோக்ஸ்தான் வீழ்த்தினார்.



    இதனால் இந்தியா 4.4 ஓவரில் 25 ரன்கள் எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு யுவராஜ் சிங் உடன் டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் விக்கெட்டுக்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் நிதானமாக விளையாடினார்கள்.



    குறிப்பாக டோனி மிகவும் நிதானமாக விளையாடினார். யுவராஜ் சிங் அவ்வப்போது பந்தை பவுண்டரிகளுக்கு விரட்டிக் கொண்டிருந்தார். இதனால் ரன் விகிதம் சற்று உயர்ந்து கொண்டிருந்தது. நேரம் ஆகஆக யுவராஜ் சிங்கின் ஆட்டத்தில் அனல் பறந்தது.

    அவர் 56 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது அரைசதத்தால் இந்தியா 21.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 28-வது ஓவரின் 5-வது பந்தில் டோனி சிக்ஸ் ஒன்று விளாசினார். இதன்மூலம் இந்தியா 150 ரன்னைத் தொட்டது. 30-வது ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி டோனி அரைசதம் அடித்தார்.



    சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங் அரைசதத்தை சதமாக மாற்றினார். 33 ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய டோனியும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்திய அணியின் ஸ்கோர் 43 ஓவரில் 281 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. 43-வது ஓவரின் கடைசி பந்தில் யுவராஜ் சிங் 150 ரன்கள் எடுத்த நிலையில் வோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 127 பந்தில் 21 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எட்டினார்.

    அடுத்து வந்த ஜெயந்த் ஜாதவ் அதிரடியாக விளையாடி 10 பந்தில் 22 ரன்கள் சேர்த்தார். 44.3 ஓவரில் 300 ரன்னைக் கடந்த இந்தியா, 47.4 ஓவரில் 350 ரன்னைக் கடந்தது.



    சதம் அடித்து தொடர்ந்து விளையாடிய டோனி 134 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். யுவராஜ் சிங் மற்றும் டோனியின் அபார ஆட்டத்தால் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்துள்ளது. ஹர்திக் பாண்டியா 19 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்க உள்ளது.
    Next Story
    ×