search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளைஞர்களின் அமைதியான போராட்டம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்: வீரேந்திர சேவாக்
    X

    இளைஞர்களின் அமைதியான போராட்டம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்: வீரேந்திர சேவாக்

    ''உங்களின் அமைதியான போராட்டம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்'' என கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
    புது டெல்லி:

    ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்தப் போராட்டம் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய நடைபெற்று, இன்றும் தொடர்ந்து வருகிறது.

    இதற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர்கள் தங்களின் இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகளை புறக்கணித்து வருகின்றனர்.

    அதேநேரம் முன்னணி நடிக, நடிகையர்கள் மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மாணவர்களின் இந்த தன்னிச்சையான போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.

    இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு டுவிட்டரில் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்து இருக்கிறார். "இளைஞர்களின் போராட்டம் அறவழியில் நடந்து வருவதைப் பார்க்க அற்புதமாக உள்ளது. உங்களின் உணர்வுகளை அமைதியான வழியில் வெளிப்படுத்துங்கள். அமைதியான போராட்டம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்" என்று சேவாக் டுவிட்டரில் கூறியிருக்கிறார்.

    சேவாக்கின் இந்த ஜல்லிக்கட்டு ஆதரவு டுவீட்டுக்கு இளைஞர்கள் பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இதேபோல ''தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" என, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×