search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹோரோசியாவுக்கு ஆறுதல் சொல்கிறார், கார்லோவிச் (வலது).
    X
    ஹோரோசியாவுக்கு ஆறுதல் சொல்கிறார், கார்லோவிச் (வலது).

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 5 மணி 15 நிமிடங்கள் நீடித்த கார்லோவிச் - ஹோரோசியா இடையிலான ‘யுத்தம்’

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் நேற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இவா கார்லோவிச் (குரோஷியா)- ஹோரோசியா ஜிபல்லோஸ் (அர்ஜென்டினா) ஆகிய வீரர்கள் இடையிலான ஆட்டத்தின் முடிவை அறிய 5 மணி 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் நேற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஆட்டம், இவா கார்லோவிச் (குரோஷியா)- ஹோரோசியா ஜிபல்லோஸ் (அர்ஜென்டினா) ஆகிய வீரர்கள் இடையிலான மோதல் தான். இருவரும் நீயா-நானா என்று சளைக்காமல் மல்லுகட்டியதால் இந்த ஆட்டத்தின் முடிவை அறிய 5 மணி 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.

    அதுவும் வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் இருவரும் தங்களது சர்வீசை மட்டுமே புள்ளியாக மாற்றிக்கொண்டே வந்ததால் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போனது. ஒரு வழியாக 42-வது கேமில் கார்லோவிச் வெற்றிக்குரிய புள்ளியை எடுத்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கடைசி செட் மட்டும் 2 மணி 37 நிமிடங்கள் நடந்தது.

    ரசிகர்களுக்கு விருந்து படைத்த இந்த ஆட்டத்தில், 20-ம் நிலை வீரரான இவா கார்லோவிச் 6-7 (6-8), 3-6, 7-5, 6-2, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 6 அடி 11 அங்குலம் உயரம் கொண்ட கார்லோவிச், சர்வீஸ் போடுவதில் வல்லவர். அதை இங்கும் காண முடிந்தது. எதிராளி தொட முடியாத அளவுக்கு 75 ஏஸ் சர்வீஸ்களை போட்டுத் தாக்கினார்.

    இந்த யுத்தம் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தாலும் ஆஸ்திரேலிய ஓபனில் சாதனைக்குரிய ஆட்டமாக அமையவில்லை. 2012-ம் ஆண்டு ஜோகோவிச்-நடால் இடையிலான இறுதி ஆட்டம் 5 மணி 53 நிமிடங்கள் நடந்ததே ஆஸ்திரேலிய ஓபனில் நீண்ட நேரம் அரங்கேறிய ஆட்டமாகும்.
    Next Story
    ×