search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா- இங்கிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட்: புனேயில் நாளை நடக்கிறது
    X

    இந்தியா- இங்கிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட்: புனேயில் நாளை நடக்கிறது

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நாளை நடக்கிறது.
    புனே:

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் மோசமாக இழந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதன் பிறகு தாயகம் திரும்பியது. அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடி விட்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளது.

    அடுத்ததாக இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    டோனி, கேப்டன் பதவியை விட்டு விலகியதால் இந்திய அணியை விராட் கோலி வழிநடத்த இருக்கிறார். அவரது தலைமையின் கீழ் டோனி முதல் முறையாக விளையாட இருப்பதும், யுவராஜ்சிங் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதும் ரசிகர்கள் மத்தியில் ஆவலை தூண்டியுள்ளது.

    டெஸ்ட் தொடரில் அசத்திய இந்திய அணி ஒரு நாள் தொடரிலும் அதே போன்று ஆதிக்கம் செலுத்துமா? என்பதை கணிப்பது கடினம். ஏனெனில் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வலுவான அணியாக இருக்கிறது. முதலாவது பயிற்சி ஆட்டத்தில் கூட 305 ரன்கள் இலக்கை ‘சேசிங்’ செய்திருந்தது. அதனால் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

    டெஸ்டில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து வீரர்கள் வரிந்து கட்டி நிற்பார்கள். மோர்கன், பில்லிங்ஸ், ஹாலெஸ், ஜோஸ் பட்லர், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ் என்று அந்த அணியில் அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. “இது முற்றிலும் வித்தியாசமான வடிவிலான போட்டி. அணியும் வேறுபட்டது. டெஸ்ட் தொடரில் சோபிக்காவிட்டாலும், ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கி இருக்கிறோம். இந்தியாவை வீழ்த்த முடியும் என்பதில் முழு நம்பிக்கையோடு இருக்கிறோம்” என்று இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அதனால் இந்த தொடர் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்று நம்பலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 93 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 50-ல் இந்தியாவும், 38-ல் இங்கிலாந்தும் வெற்றி கண்டிருக்கின்றன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. மூன்று ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

    இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி நேரடி ஒரு நாள் தொடரில் விளையாடுவது இது 9-வது முறையாகும். 1984-85-ம் ஆண்டு மட்டும் அந்த அணி இங்கு ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 32 ஆண்டு கால ஏக்கத்தை இங்கிலாந்து தணிக்குமா அல்லது மீண்டும் ஒரு முறை அடங்கிப்போகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    போட்டிக்கான இவ்விரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ரஹானே, யுவராஜ்சிங், டோனி, அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, கேதர் ஜாதவ் அல்லது ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார் அல்லது உமேஷ் யாதவ்.

    இங்கிலாந்து: ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ், ஜோ ரூட், சாம் பில்லிங்ஸ், மோர்கன் (கேப்டன்), பேர்ஸ்டோ அல்லது ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித் அல்லது டாவ்சன்.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, 3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    Next Story
    ×