search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் டோனி நேற்று பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    இந்திய கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் டோனி நேற்று பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    இங்கிலாந்துடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் தரவரிசை மாறுமா?

    நாளை தொடங்கும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முடிவும் தரவரிசையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    துபாய் :

    சர்வதேச ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் முதல் 5 இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (120 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (116 புள்ளி), இந்தியா (111 புள்ளி), நியூசிலாந்து (111 புள்ளி), இங்கிலாந்து (107 புள்ளி) ஆகிய அணிகள் வகிக்கின்றன. பாகிஸ்தான் 89 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இந்திய அணி அடுத்து இங்கிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி புனேயில் 15-ந்தேதி நடக்கிறது. இந்த தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றால் 114 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்காவை நெருங்கும். இந்த முடிவு நேர்மாறாக அமைந்தால் இங்கிலாந்து 4-வது இடத்துக்கு முன்னேறும். இந்திய அணி 5-வது இடத்துக்கு சறுக்கும்.

    அதே சமயம் நாளை தொடங்கும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முடிவும் தரவரிசையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் அதே 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும். 3-2 என்ற கணக்கில் வென்றால் ஒரு புள்ளியை இழக்கும். மாறாக பாகிஸ்தான் 4-1 என்ற கணக்கிலோ அல்லது 5-0 என்ற கணக்கிலோ தொடரை வசப்படுத்தினால் ஆஸ்திரேலிய அணி ‘நம்பர் ஒன்’ இடத்தை பறிகொடுக்கும்.

    ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் (861 புள்ளி), இந்திய கேப்டன் விராட் கோலி (848 புள்ளி), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (846 புள்ளி) ஆகியோர் உள்ளனர். விராட் கோலி இங்கிலாந்து தொடரில் அசத்தும் பட்சத்தில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. இதே போல் வார்னரும் முதலிடத்தை பிடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். இதனால் இவ்விரு தொடர்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
    Next Story
    ×