search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது சவாலானது: மோர்கன்
    X

    சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது சவாலானது: மோர்கன்

    இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எங்களுக்கு சவாலானதே என்று இங்கிலாந்து ஒருநாள் கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் தொடரை இந்தியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த நிலையில் 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. அந்த அணியினர் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    டெஸ்ட் அணியில் இடம் பெற்ற 9 இங்கிலாந்து வீரர்கள் ஒருநாள் போட்டிக்காக மீண்டும் இந்தியா வந்துள்ளனர். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டனாக இயான் மோர்கன் டெஸ்ட் அணியில் இடம்பெற வில்லை.

    மும்பை புறநகர் பகுதியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மோர்கன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எங்களுக்கு சவாலானதே, அதே நேரத்தில் இந்திய அணியுடன் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

    இது ஒரு குறுகிய காலத் தொடர்தான். ஆனாலும் நாங்கள் ஏராளமான பாடங்களை கற்றுள்ளோம். ஒருநாள் தொடருக்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதால் எங்களை தயார்படுத்திக் கொள்ள இயலும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து வீரர் பட்லர் கூறும்போது, நாங்கள் டெஸ்ட் தொடரை இழந்தோம். ஆனால் டெஸ்டில் இருந்து ஒருநாள் தொடர் முற்றிலும் மாறுபட்டது என்றார்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி வருகிற 15-ந்தேதி புனேயில் நடக்கிறது. அதற்கு முன்னதாக அந்த அணி இந்தியா ‘ஏ’ அணியுடன் நாளையும் (10-ந்தேதி), 12-ந் தேதியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
    Next Story
    ×