search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ரவீந்திர ஜடேஜாவின் சாதனைகள்
    X

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ரவீந்திர ஜடேஜாவின் சாதனைகள்

    இந்திய கிரிக்கெட் அணி சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா செய்த சாதனைகளை பார்க்கலாம்.
    சென்னை :

    இந்த ஆண்டை தித்திப்போடு முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமர்க்களப்படுத்தியது.

    இந்த போட்டியில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அடுத்தடுத்து ‘செக்’ வைத்தார். ஸ்கோர் 103 ரன்களாக உயர்ந்த போது, அலஸ்டயர் குக் (49 ரன், 134 பந்து, 4 பவுண்டரி) லெக்ஸ்லிப்பில் நின்ற ராகுலிடம் கேட்ச் ஆனார். ஜடேஜாவின் சுழல் வலையில் குக் சிக்குவது இது 6-வது முறையாகும்.

    ஜென்னிங்ஸ் (54 ரன், 121 பந்து, 7 பவுண்டரி) ஜடேஜாவின் பந்தில் இறங்கி வந்து ஆட முற்பட்ட போது விக்கெட்டை தாரைவார்த்தார். பந்து அவரது காலின் அடிப்பகுதியில் உரசிய பிறகு பேட்டில் பட்டு நேராக பவுலிங் செய்த ஜடேஜாவின் கைக்கு கேட்ச்சாக சென்றது. அவரும் அதை எளிதாக கேட்ச் செய்தார்.

    அடுத்து வந்த அபாயகரமான பேட்ஸ்மேன் ஜோ ரூட்டையும் (6 ரன், 22 பந்து) ஜடேஜா காலி செய்தார். முதலில் நடுவர் எல்.பி.டபிள்யூ. வழங்க மறுக்க, பிறகு டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்து அவரை வெளியேற்றினர்.

    பவுலிங்கில் கலக்கிய ஜடேஜா, பீல்டிங்கிலும் பிரமிக்க வைத்தார். நட்சத்திர வீரர் பேர்ஸ்டோ (1 ரன்) லெக்சைடில் தூக்கியடித்த போது, ஜடேஜா எல்லைக்கோடு நோக்கி முன்பக்கமாக ஓடிச்சென்று கேட்ச் செய்த விதம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மறுபக்கம் போராடிய மொயீன் அலி 44 ரன்களில் (97 பந்து) கேட்ச் ஆனதும், ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது.

    * சென்னை டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் திரட்டி, அதன் பிறகு மோசமான இன்னிங்ஸ் தோல்வியை (இன்னிங்ஸ் மற்றும் 75 ரன் வித்தியாசம்) சந்தித்த வகையில் முதலிடம் இங்கிலாந்துக்கு தான். இதற்கு முன்பும் இதே மோசமான அனுபவம் இங்கிலாந்துக்கு தான் உண்டு. 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 432 ரன்கள் சேர்த்து, இறுதியில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

    * டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுடன் 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது.

    * ஒரு டெஸ்டில் அரைசதம் (51 ரன்), 10-க்கும் மேல் விக்கெட் (முதல் இன்னங்சில் 3 விக்கெட், 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்), 4 மற்றும் அதற்கு மேல் கேட்ச் (4 கேட்ச்) இப்படியொரு சாதனையை ஒரு சேர செய்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனைக்கு ரவீந்திர ஜடேஜா சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

    *இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்டுகளில் கேப்டனாக பணியாற்றியவர் என்ற சிறப்புக்குரிய அலஸ்டயர் குக் இப்போது அதிக டெஸ்டுகளில் தோற்ற கேப்டனாகவும் மாறி விட்டார். குக் தலைமையில் இங்கிலாந்து அணி 59 டெஸ்டுகளில் விளையாடி 24 வெற்றி, 22 தோல்வி, 13 டிரா கண்டுள்ளது. இதற்கு முன்பு மைக் ஆதர்டன் தலைமையில் 21 டெஸ்டுகளில் தோற்றதே இங்கிலாந்து கேப்டன் ஒருவரின் மோசமான சாதனையாக இருந்தது.
    Next Story
    ×