search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி சாதிக்க சச்சினின் யோசனை
    X

    வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி சாதிக்க சச்சினின் யோசனை

    வெளிநாட்டு மண்ணில் இந்திய வீரர்கள் சாதிக்க வேண்டுமென்றால் ரஞ்சி டிராபி டெஸ்டை இரண்டு ஆடுகளத்தில் நடத்த வேண்டும் என்று யோசனைக் கூறியுள்ளார் சச்சின்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்கா தொடருக்குப் பின் இந்திய மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு தோல்வியைக் கூட சந்தித்தது கிடையாது.

    இந்திய மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி, வெளிநாட்டு (தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து) மண்ணில் எப்படி விளையாடும் என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ரஞ்சி டிராபியில் சில மாற்றங்களை கொண்டு வந்து வீரர்களை வெளிநாட்டு மண்ணிற்கு ஏற்றவகையில் தயார் செய்ய வேண்டும் என்று யோசனை கூறியுள்ளார்.

    ஏற்கனவே, உள்ளூர் அணிகளுக்கு சாதகமான வகையில் ஆடுகளம் தயாரிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டால் தற்போது ரஞ்சி டிராபி தொடர் இரண்டு அணிகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்துப்பட்டு வருகிறது. மேலும், ரஞ்சி டிராபியில் தீவிர மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்று சச்சின் தனது யோசனையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சச்சின் கூறுகையில் ‘‘தற்போது ரஞ்சி டிராபி தொடர் டெஸ்ட் கிரிக்கெட் பொதுவான இடத்தில் நடைபெறுகிறது. இதை தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய யோசனை. நாம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் சென்று விளையாடும்போது ‘கூக்கபுர்ரா’ பந்தில் விளையாட வேண்டியிருக்கும். இந்த வகை பந்து விரைவிலேயே ஸ்விங் ஆகும்.

    தற்போது ரஞ்சி போட்டியில் நமது இளைஞர்கள் எஸ்ஜி வகை பந்தில் விளையாடுகிறார்கள். அவர்கள் வெளிநாடு செல்லும்போது கூக்கபுர்ரா பந்தை எதிர்கொள்ள கஷ்டப்படுகிறார்கள்.

    ரஞ்சி டிராபி டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆடுகளத்தில் நன்றாக புற்கள் இருக்க வேண்டும். இதில் கூக்கபுர்ரா பந்துடன் விளையாட வேண்டும். இது தொடக்க பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். அதே நேரத்தில் பந்து வீச்சாளர்களும் திறமையை வெளிப்படுத்த முடியும். நமது சுழற்பந்து வீச்சாளர்கள் இப்படிப்பட்ட ஆடுகளத்தில் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்று கற்றுக் கொள்வார்கள்.

    அடுத்து 2-வது இன்னிங்சில் பந்து நன்றாக திரும்பக்கூடிய ஆடுகளத்திற்கு மாற வேண்டும். இங்கு எஸ்ஜி பந்தில் விளையாட வேண்டும். இது நமது பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறந்த முறையில் விளையாட உதவும். வெளிநாட்டு மண்ணில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவற்கான முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அதே சமயத்தில் சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பதை மறந்து விடக்கூடாது’’ என்றார்.
    Next Story
    ×