search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில ரோல்பால் போட்டியில் திண்டுக்கல், ஈரோடு அணிகள் மோதியபோது எடுத்த படம்.
    X
    மாநில ரோல்பால் போட்டியில் திண்டுக்கல், ஈரோடு அணிகள் மோதியபோது எடுத்த படம்.

    திண்டுக்கல்லில் மாநில சப்-ஜூனியர் ரோல்பால் போட்டி

    மாநில சாம்பியன் சப்-ஜூனியர் ரோல்பால் விளையாட்டு போட்டி திண்டுக்கல் பார்வதீஸ் அனுக்கிரகா இன்டர்நேஷனல் பள்ளியில் நேற்று தொடங்கியது.
    திண்டுக்கல் :

    தமிழ்நாடு ரோல்பால் சங்கம் சார்பாக 4-வது ஆண்டுக்கான மாநில சாம்பியன் சப்-ஜூனியர் ரோல்பால் விளையாட்டு போட்டி திண்டுக்கல் பார்வதீஸ் அனுக்கிரகா இன்டர்நேஷனல் பள்ளியில் நேற்று தொடங்கியது. ரோல்பால் என்பது தலா 6 வீரர்களை கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டியாகும். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், ‘ஸ்கேட்டிங்’ போட்டியை போன்று கால்களில் ‘ரோலர்’ அணிந்து விளையாட வேண்டும். இந்த போட்டியில், கைகளால் பந்தை கடத்தி சென்று கோல் கம்பத்துக்குள் எறிந்து கோல் போடவேண்டும்.

    மாவட்ட ரோல்பால் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த போட்டியில் மதுரை, திருச்சி, ஈரோடு, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 மாணவர்கள் அணியும், 11 மாணவிகள் அணியும் கலந்து கொள்கின்றன. 3 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளுக்கிடையே ‘லீக்’ மற்றும் ‘நாக்-அவுட்’ முறையில் போட்டிகள் நடக்க உள்ளன.

    நேற்று மாலை நடந்த தொடக்கவிழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட ரோல்பால் சங்க தலைவர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். அனுக்கிரகா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் ஸ்ரீதர் குத்துவிளக்கு ஏற்றி போட்டியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ரோல்பால் சங்க தலைவர் ஆவண் செந்தில்குமார், செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் பிரேம்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முதலில் நடந்த போட்டியில் திண்டுக்கல் மற்றும் ஈரோடு அணிகள் மோதின. போட்டியின் முடிவில் திண்டுக்கல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் வேலூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சி அணியை தோற்கடித்தது. போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு அணிக்கான சப்-ஜூனியர் வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    Next Story
    ×