search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் ஆசிய டி20 கிரிக்கெட்: இந்தியா தொடர்ந்து 5-வது வெற்றி
    X

    பெண்கள் ஆசிய டி20 கிரிக்கெட்: இந்தியா தொடர்ந்து 5-வது வெற்றி

    பெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் நேபாளத்தை 21 ரன்களில் சுருட்டி இந்திய அணி தொடர்ந்து 5-வது வெற்றியை பெற்றது.
    பாங்காங்:

    பெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் நேபாளத்தை 21 ரன்களில் சுருட்டி இந்திய அணி தொடர்ந்து 5-வது வெற்றியை பெற்றது.

    6 அணிகள் இடையிலான பெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 13-வது லீக்கில் நடப்பு சாம்பியன் இந்தியா-நேபாளம் அணிகள் சந்தித்தன. ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டதால் இந்திய அணியில் முக்கிய வீராங்கனைகள் மிதாலி ராஜி, பிரீத்தி போஸ், சுஷ்மா வர்மா, ஜூலன் கோஸ்வாமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

    ‘டாஸ்’ ஜெயித்த நேபாளம் முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்தது. ஆல்-ரவுண்டர் ஷிகா பாண்டே 39 ரன்களும் (32 பந்து, 5 பவுண்டரி), வனிதா 21 ரன்களும் எடுத்தனர்.

    தொடர்ந்து களம் இறங்கிய குட்டி அணியான நேபாளத்தை இந்திய பந்து வீச்சாளர்கள் வறுத்தெடுத்தனர். தாக்குப்பிடிக்க முடியாமல் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை பறிகொடுத்த நேபாள அணி 16.3 ஓவர்களில் வெறும் 21 ரன்களில் சுருண்டது. அந்த அணிக்கு எக்ஸ்டிரா வகையில் கிடைத்த 7 ரன்களே (வைடு) அதிகபட்சமாகும். 4 வீராங்கனைகள் டக்-அவுட் ஆனார்கள். 8 ஓவர்கள் மெய்டனாக்கப்பட்டன. இதன் மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மெகா வெற்றியை பெற்றது. இந்திய தரப்பில் பூனம் யாதவ் 3 விக்கெட்டுகளும், அனுஜா பட்டீல், மேகனா தலா 2 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே, மன்சி ஜோஷி, எக்கா பிஷ்ட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான ஸ்கோராக (நேபாளம் 21 ரன்) இது பதிவானது. இதற்கு முன்பு இதே தொடரில் வங்காளதேச அணி பாகிஸ்தானுக்கு எதிராக 44 ரன்களில் சுருண்டது குறைந்தபட்சமாக இருந்தது.

    தான் விளையாடிய 5 ஆட்டங்களிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று பட்டியலில் 10 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடம் வகிக்கிறது. 5 ஆட்டத்திலும் தோல்வியை தழுவிய நேபாளம் கடைசி இடத்தில் உள்ளது.

    இன்று நடைபெறும் கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் வங்காளதேசம் (4 புள்ளி)-இலங்கை (4 புள்ளி), பாகிஸ்தான் (6 புள்ளி)-தாய்லாந்து (2 புள்ளி) அணிகள் மோதுகின்றன. நாளை இறுதிப்போட்டி நடக்கிறது. இந்திய அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கவே அதிக வாய்ப்புள்ளது. 
    Next Story
    ×