search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணிக்கு ஆறுதல் வெற்றி
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணிக்கு ஆறுதல் வெற்றி

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணி 5-4 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.
    படோர்டா:

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணி 5-4 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

    இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில், படோர்டாவில் நேற்று இரவு நடந்த 53-வது லீக்கில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.யும், எப்.சி.கோவாவும் சந்தித்தன. கடந்த ஆண்டு இதே இடத்தில் சாம்பியன் கோப்பைக்காக மல்லுகட்டிய இவ்விரு அணிகளும் இந்த சீசனில் அரைஇறுதி வாய்ப்பை இழந்து ஆறுதல் வெற்றிக்காக ஆட வேண்டிய பரிதாபத்துக்கு தள்ளப்பட்டது.

    இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்ற நிலையில் இரு அணி வீரர்களும் முழுக்க முழுக்க தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். அதிரடியில் கவனம் செலுத்தியதால், தடுப்பாட்டத்தில் கோட்டை விட்டனர். 4-வது நிமிடத்தில் கிடைத்த பிரீகிக் வாய்ப்பில் சென்னையின் எப்.சி. வீரர் ஜெர்ரி லால்ரின்ஜூலா பிரமாதமாக கோல் அடித்தார். 21.83 மீட்டர் தூரத்தில் இருந்து இடது காலால் அவர் உதைத்த பந்து, முன்வரிசையில் அரண்போன்று நின்ற வீரர்களை தாண்டி வலைக்குள் புகுந்தது. அடுத்த 2-வது நிமிடத்திலேயே கோவா பதிலடி கொடுத்தது. கோவா வீரர் ஜோப்ரே கோன்சலேஸ் தட்டிக்கொடுத்த பந்தை சக வீரர் ரபெல் லூசிஸ் கோல் அடித்தார்.

    13-வது நிமிடத்தில் சென்னையின் ஷாட்டை தடுக்க கோவா வீரர் கிரிகோரி அர்னோலின் முயற்சித்த போது பந்து அவர் மீது பட்டு சுயகோலாக மாறியது. இதனால் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    21-வது நிமிடத்தில் ரபெல் லூயிசை சென்னை வீரர் ஹர்மன்ஜோத் கப்ரா தள்ளி விட்டதால் கோவாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. இந்த பொன்னான வாய்ப்பை கோவா வீரர் ஜோப்ரே கோன்சலேஸ் கோலாக்கினார். 21 நிமிடத்திற்குள் 4 கோல்கள் அடிக்கப்பட்டது இரு அணிகளின் தடுப்பாட்டம் பலவீனமாக இருந்ததை பிரதிபலித்தது. 28-வது நிமிடத்தில் எதிரணி வீரர்களை சுலபமாக ஏமாற்றி சென்னை வீரர் டுடு ஒமாக்பெமி கோல் போட்டார். முதல் பாதியில் சென்னை 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை கண்டது.

    பிற்பகுதியிலும் இரு அணி வீரர்களும் இதே ஆக்ரோஷத்துடன் வலம் வந்ததால் களத்தில் அனல் பறந்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் வரிந்து கட்டி நின்ற கோவா வீரர்கள் 68-வது மற்றும் 76-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தனர். சஹில் தவோரா, ரபெல் லூயிஸ் ஆகியோரின் கோல்கள் மூலம் கோவா முன்னிலையை உருவாக்கி கொண்டது.

    88-வது நிமிடத்தில் கோவா வீரர் ராஜூ கெய்க்வாட் கையால் பந்தை தடுத்ததால், சென்னைக்கு பெனால்டி அதிர்ஷ்டம் கிட்டியது. இதை ஜான் அர்னே ரைஸ் தவறுக்கு இடம் கொடுக்காமல் கோலாக்கினார். இதையடுத்து ஆட்டம் டிராவில் முடியலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் உள்ளிட்ட விரயத்துக்காக ஒதுக்கப்பட்ட கடைசி கட்ட நிமிடங்களில் கோவா வீரர் சஹில் தவோரா சூப்பராக கோல் அடித்து அட்டகாசப்படுத்தினார். சற்று தூரத்தில் இருந்து அவர் அடித்த ஷாட், கம்பத்தில் பட்டு அதிரடியாக வலைக்குள் நுழைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். அத்துடன் ஆட்டமும் முடிவுக்கு வந்தது.

    பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் கோவா அணி 5-4 என்ற கோல் கணக்கில் சென்னையை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு இதே இடத்தில் கடைசி நிமிட கோலால் சென்னையிடம் தோல்வியை தழுவிய கோவா அணி இந்த முறை அதே போன்று பழிதீர்த்த திருப்தியுடன் வெளியேறியது.

    இந்தஆட்டத்தில் மொத்தம் 9 கோல்கள் அடிக்கப்பட்டன. ஐ.எஸ்.எல். கால்பந்து வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச கோல் எண்ணிக்கை (முன்பு 7 கோல்) இது தான்.

    இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டீ கொல்கத்தா, புனே சிட்டி அணிகள் சந்திக்கின்றன. 19 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கும் கொல்கத்தா அணி கோல் வித்தியாசம் அடிப்படையில் அரைஇறுதியை உறுதி செய்து விட்டது. மூன்று சீசனிலும் அரைஇறுதியை எட்டிய ஒரே அணி கொல்கத்தா தான். புனே சிட்டி அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. இதில் வெற்றி பெற்று 2-வது இடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் கொல்கத்தா அணி வியூகங்களை தீட்டி வருகிறது. 
    Next Story
    ×