search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல் தகுதி பெற்று கடைசி 2 டெஸ்டில் ராகுல் ஆடுவார்: தேர்வுக்குழு தலைவர் தகவல்
    X

    உடல் தகுதி பெற்று கடைசி 2 டெஸ்டில் ராகுல் ஆடுவார்: தேர்வுக்குழு தலைவர் தகவல்

    காயத்தால் அவதியடைந்து வரும் லோகேஷ் ராகுல் உடல் தகுதி பெற்று இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய இரண்டு டெஸ்டிலும் விளையாடுவார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவர் ராகுல். 10 டெஸ்டில் விளையாடி 3 சதம் அடித்து அவர் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார்.

    கடந்த செப்டம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராகுல் காயம் அடைந்தார். முதல் டெஸ்டில் ஆடிய பிறகு காயத்தால் எஞ்சிய 2 டெஸ்ட் விளையாடவில்லை. அதோடு இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டிலும் இடம் பெறவில்லை.

    உடல் தகுதி பெற்றதால் விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் விளையாடினார். இதில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

    இந்த நிலையில் கே.எல். ராகுல் மீண்டும் காயம் அடைந்தார். விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் பீல்டிங்கின்போது அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டில் அவர் ஆடவில்லை. பார்த்தீவ் பட்டேல் தொடக்க வீரராக முரளி விஜய்யுடன் இணைந்து ஆடி முத்திரை பதித்தார்.

    இந்த நிலையில் ராகுல் உடல் தகுதி பெற்று இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய இரண்டு டெஸ்டிலும் விளையாடுவார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

    டெல்லி-விதர்பா அணிகள் மோதிய ரஞ்சி டிராபி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை பார்க்க சென்னை வந்தார். அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    கே.எஸ்.ராகுல் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் உடல் தகுதி பெற்று விளையாடுவார். அணியின் உடல் இயக்க நிபுணர் இதுகுறித்து அறிக்கை அனுப்பி உள்ளார். கடைசி 2 டெஸ்டில் அவர் விளையாடுவது பற்றி தேர்வுக்குழு பரிசீலனை செய்து வருகிறது.

    தற்போது அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பான நிலையில் உள்ளனர். இதனால் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற கடும் போட்டி நிலவுகிறது.

    ரகானே பேட்டிங் நிலை குறித்து கவலைப்படவில்லை. ஒருசில ஆட்டத்தை வைத்து எதுவும் கூற இயலாது. அவர் ஒரு சிறந்த பீல்டர். அணியுடன் சொத்தாக அவர் கருதப்படுகிறார்.

    ரஞ்சி டிராபியில் விளையாடி வரும் ரிஷப் பண்ட், அக்‌ஷய் வாக்கர், தவான், காம்பீர் ஆட்டத்தை கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×