search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்த விராட் கோலி
    X

    டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்த விராட் கோலி

    ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் தொடர்ந்து முன்னேறி வரும் இந்திய கேப்டன் விராட் கோலி தற்போது 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
    துபாய் :

    மொகாலியில் நேற்று முன்தினம் நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

    இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 833 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மொகாலி டெஸ்டில் 62 ரன் மற்றும் 6 ரன் (நாட்-அவுட்) வீதம் எடுத்ததன் மூலம் அவருக்கு 9 தரவரிசை புள்ளி கூடுதலாக கிடைத்திருக்கிறது.

    இங்கிலாந்து தொடருக்கு முன்பாக 15-வது இடத்தில் இருந்த விராட் கோலி இந்த தொடரில் மொத்தம் 405 ரன்கள் குவித்து இருப்பதுடன் தரவரிசையிலும் ஜெட் வேகத்தில் ஏற்றம் கண்டு, மிகச்சிறந்த நிலையை எட்டியிருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய இரு டெஸ்டிலும் அவர் இதே போன்று கலக்கினால் நிச்சயம் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பிடித்து விட முடியும்.

    ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலிடமும் (897 புள்ளி), இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (847 புள்ளி) 2-வது இடமும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 4-வது இடமும் (817 புள்ளி) வகிக்கிறார்கள். இதே டெஸ்டில் 89, 15 ரன்கள் வீதம் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ (759 புள்ளி) 3 இடங்கள் அதிகரித்து தனது வாழ்க்கையில் சிறந்த தரநிலையாக 9-வது இடத்தை பெற்றிருக்கிறார்.

    மற்ற இந்திய வீரர்களான புஜாரா 8-வது இடத்திலும் (ஒரு இடம் ஏற்றம்), ரஹானே 12-வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு), எம்.விஜய் 29-வது இடத்திலும் (6 இடம் பின்னடைவு) உள்ளனர்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றம் இல்லை. இந்தியாவின் அஸ்வின் (891 புள்ளி), இலங்கையின் ஹெராத் (867 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் (844 புள்ளி), இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (834 புள்ளி) ஆகியோர் முதல் 4 இடங்களில் தொடருகிறார்கள்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் 4 இடங்கள் எகிறி, முதல் முறையாக டாப்-5 இடங்களுக்குள் நுழைந்து 5-வது இடத்தை பெற்றுள்ளார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 7-வது இடத்திலும் (ஒரு இடம் சரிவு), முகமது ஷமி 19-வது இடத்திலும் (2 இடம் முன்னேற்றம்) உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் அஸ்வினின் அரியணைக்கு ஆபத்து இல்லை. மொகாலி டெஸ்டில் அரைசதத்துடன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் 24 புள்ளிகள் கூடுதலாக சேகரித்து மொத்தம் 493 புள்ளிகளுடன் தொடர்ந்து ‘நம்பர் ஒன்’ ஆல்-ரவுண்டராக விளங்குகிறார்.

    இதே போட்டியில் 90 ரன்களும், 4 விக்கெட்டுகளும் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரவீந்திர ஜடேஜா 6-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு (334 புள்ளி) வந்துள்ளார். வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் (405 புள்ளி) 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (351 புள்ளி) 3-வது இடத்திலும் இருக்கிறார்கள்.
    Next Story
    ×