search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெற்றி
    X

    மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெற்றி

    மக்காவ் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சாய்னா நேவால் போராடி வெற்றி பெற்றார்.
    மக்காவ்:

    மக்காவ் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சாய்னா நேவால் போராடி வெற்றி பெற்றார்.

    மொத்தம் ரூ.82 லட்சம் பரிசுத்தொகைக்கான மக்காவ் ஓபன் கிராண்ட்பிரி சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியான மக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னா நேவால், ஹனா ரமாடினியுடன் (இந்தோனேஷியா) மோதினார். 63 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் சாய்னா 21-23, 21-14, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டார்.

    11-ம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால், கால் முட்டி அறுவை சிகிச்சைக்கு பிறகு இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுகிறார். தன்னை விட தரவரிசையில் 33 இடங்கள் பின்தங்கிய ரமாடினியை கூட போராடியே வென்று இருக்கிறார். சாய்னா 2-வது சுற்றில் இன்னொரு இந்தோனேஷிய வீராங்கனை டினார் டியா அயுஸ்டினை சந்திக்கிறார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எதிராளி விலகியதால் முதலாவது சுற்றை ஆடாமலேயே 2-வது சுற்றை எட்டிய காமன்வெல்த் சாம்பியனான காஷ்யப் (இந்தியா) அடுத்து சூன் வெய் சென்னை (சீனத்தைபே) எதிர்கொண்டார். இதில் அபாரமாக செயல்பட்ட காஷ்யப் 21-19, 21-8 என்ற நேர் செட்டில் 33 நிமிடங்களில் சூன் வெய் சென்னை துவம்சம் செய்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரனீத் 21-12, 21-15 என்ற நேர் செட்டில் சன் பிய்ஸியாங்கை (சீனா) பந்தாடினார்.

    அதே சமயம் ஹாங்காங் ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான வளரும் இந்திய நட்சத்திரம் சமீர் வர்மா 18-21, 13-21 என்ற நேர் செட்டில் முகமது பாயு பாங்கிஸ்துவிடம் (இந்தோனேஷியா) தோற்று வெளியேறினார்.

    2013, 2014, 2015-ம் ஆண்டு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து, உலக சூப்பர் சீரிஸ் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக இந்த முறை மக்காவ் ஓபனில் பங்கேற்காமல் கடைசி நேரத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×