search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தியது கவுகாத்தி
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தியது கவுகாத்தி

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்திய கவுகாத்தி அணி அரைஇறுதி வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.
    கவுகாத்தி:

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்திய கவுகாத்தி அணி அரைஇறுதி வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.

    3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் லீக் சுற்று ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது. கவுகாத்தி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு அரங்கேறிய 52-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)- டெல்லி டைனமோஸ் அணிகள் கோதாவில் இறங்கின. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் கவுகாத்தி வீரர்கள் புகுந்தனர்.

    பந்து டெல்லி வீரர்கள் பக்கமே (64 சதவீதம்) அதிகமாக சுற்றிக்கொண்டிருந்தாலும், வாய்ப்பை கோலாக்குவதில் கவுகாத்தி வீரர்கள் வரிந்து கட்டி நின்றனர். ஆனால் முதல் பாதியில் இரு அணியின் வியூகங்களுக்கும் பலன் இல்லை.

    பிற்பாதியில் கவுகாத்தி வீரர்கள் மேலும் ஆக்ரோஷம் காட்டினர். 60-வது நிமிடத்தில் மைதானத்தின் மையப்பகுதியில் இருந்து கவுகாத்தியின் டைடர் ஜோகோரா தூக்கியடித்த பந்தை சக வீரர் சேத்யாசென் சிங் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எதிரணியின் கோல் கம்பத்தை நெருங்கினார். அப்போது டெல்லி தடுப்பாட்டக்காரர் அவரை இழுத்து தடுக்க பார்த்தார். அவரை சாதுர்யமாக ஏமாற்றிய சேத்யாசென்சிங், டெல்லி கோல் கீப்பர் சன்டானாவுக்கும் ‘தண்ணி’ காட்டி விட்டு பந்தை வலைக்குள் அனுப்பி அமர்க்களப்படுத்தினார். இதனால் குழுமியிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். 71-வது நிமிடத்தில் கவுகாத்தி மேலும் ஒரு கோல் அடித்தது. அந்த அணியின் கோபி கிறிஸ்டியன் என்ற ரோமாரிச் இந்த கோலை போட்டார்.

    பதில் கோல் திருப்ப டெல்லி வீரர்கள் கடும் முயற்சி எடுத்தனர். 86-வது நிமிடத்தில் டெல்லி அணியின் மார்செலோ பெரீரா அடித்த ஷாட், மயிரிழையில் நழுவி கம்பத்தை உரசிச் சென்றது. என்றாலும் கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) மார்செலோ பெரீரா ஒரு வழியாக டெல்லிக்கு ஆறுதல் கோல் அடித்தார்.

    முடிவில் கவுகாத்தி அணி 2-1 என்ற கோல் கணக்கில் டெல்லியை பதம் பார்த்து அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. கவுகாத்தி அணி (18 புள்ளி) தனது கடைசி லீக்கில் கேரளா பிளாஸ்டர்சை (19 புள்ளி) எதிர்கொள்கிறது. இதில் கவுகாத்தி வெற்றி பெற்றால் அரைஇறுதியை எட்டலாம்.

    இன்னும் 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கும் நிலையில் மும்பை அணி மட்டுமே இதுவரை அரைஇறுதியை உறுதி செய்திருக்கிறது. மீதமுள்ள மூன்று அரைஇறுதி ஆட்டத்துக்கு டெல்லி, கொல்கத்தா, கேரளா, கவுகாத்தி அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    படோர்வில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.- எப்.சி. கோவா அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு இறுதி சுற்றில் சந்தித்த இவ்விரு அணிகளும் இந்த சீசனில் லீக் சுற்றோடு வெளியேறுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்து விட்டதால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற போதிலும் போட்டியை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் மோதல் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 
    Next Story
    ×