search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி விராட் கோலியை அதிகம் நம்பி இருக்கிறதா?: கேப்டன் டோனி பேட்டி
    X

    இந்திய அணி விராட் கோலியை அதிகம் நம்பி இருக்கிறதா?: கேப்டன் டோனி பேட்டி

    இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலியை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி இருக்கவில்லை என்று கேப்டன் டோனி கூறியுள்ளார்.
    ராஞ்சி :

    ராஞ்சியில் நேற்று முன்தினம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் நியூசிலாந்து நிர்ணயித்த 261 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 98 ரன்களுடன் வலுவாக இருந்தது. விராட் கோலி (45 ரன்), ரஹானே (57), கேப்டன் டோனி (11 ரன்) ஆகியோர் வெளியேறியதும் நியூசிலாந்தின் கை ஓங்கி விட்டது. 48.4 ஓவர்களில் இந்திய அணி 241 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருக்கிறது. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (பிற்பகல் 1.30 மணி) நடக்கிறது.

    தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேட்டிங்கில் பின்வரிசையில் களம் இறங்கி அதுவும் இது போன்ற ஆடுகளங்களில் சிறப்பாக ஆடுவது என்பது மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று. தொடர்ந்து ரன் எடுக்க வேண்டும், பார்ட்னர்ஷிப் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட நெருக்கடிகள் இருக்கும். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் பணி எளிதான காரியம் அல்ல. அத்துடன் 5-வது, 6-வது அல்லது 7-வது வரிசைக்கு ஏற்ற முழுமையான ஒரு வீரர் எப்போதும் கிடைக்கமாட்டார்.

    பின்வரிசையில், குறிப்பாக இத்தகைய ஆடுகளங்களில் இலக்கை துரத்தும் போது, சாதிப்பது என்பது கடினமாகத் தான் இருக்கும். தற்போது பின்வரிசையில் விளையாடும் வீரர்கள் போதிய அனுபவம் இல்லாதவர்கள். கற்றுக்கொள்வதற்கும், தங்களை நிலை நிறுத்தி கொள்வதற்கும் அவர்களுக்கு மேலும் அவகாசம் அளிக்க வேண்டியது அவசியம். மேலும் பல போட்டிகளில் விளையாடி அனுபவம் பெறும் போது, ‘சேசிங்’ செய்கையில் எது சிறந்தது என்பதை கண்டறிந்து, அதற்கு ஏற்ப செயல்பட முடியும்.

    இந்திய அணி துணை கேப்டன் விராட் கோலியைத் தான் மிக அதிகமாக நம்பி இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். அந்த மாதிரி கிடையாது. இது போன்ற புள்ளி விவரங்கள் துல்லியமான நிலவரங்களை பிரதிபலிப்பதில்லை.

    இவ்வாறு டோனி கூறினார்.

    இதற்கிடையே இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘டோனி, தொடர்ந்து 4-வது பேட்டிங் வரிசையில் களம் இறங்கட்டும். இந்த நிலையில் இருந்து அவர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கலாம். போட்டியை வெற்றியுடன் முடிக்கக்கூடிய வீரர்கள் 40-வது ஓவருக்கு பிறகு தான் இறங்க வேண்டும் என்பது கிடையாது.

    விராட் கோலி 3-வது வரிசையில் இறங்கி, வெற்றிகரமாக ஆட்டத்தை நிறைவு செய்வதை பார்க்கிறோம். எனவே பின்வரிசையில் ஆடும் வீரரால் தான் போட்டியை சுபமாக முடிக்க முடியும் என்று நினைப்பது தவறானதாகும். கோலி மிகச்சிறந்த வீரர் தான். ஆனால் அவரை மட்டுமே இந்திய அணி நம்பி இருப்பதாக கருதவில்லை’ என்றார்.
    Next Story
    ×