search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீசை 133 ரன்னில் வீழ்த்தி பாகிஸ்தான் 2-0 எனத் தொடரைக் கைப்பற்றியது
    X

    வெஸ்ட் இண்டீசை 133 ரன்னில் வீழ்த்தி பாகிஸ்தான் 2-0 எனத் தொடரைக் கைப்பற்றியது

    அபுதாபியில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 133 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என பாகிஸ்தான் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
    பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் அபுதாபியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி யூனிஸ்கான் (127), மிஸ்பா உல் ஹக் (96) ஆகியோரின் அபார ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 452 ரன்கள் குவித்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 224 ரன்னில் சுருண்டது. 228 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஆசாத் ஷபிக் 58 ரன்னுடனும், யூனிஸ்கான் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 455 ரன்கள் முன்னிலைப் பெற்றது பாகிஸ்தான். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 456 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    கடின இலக்குடன் கிரேக் பிராத்வைட், ஜான்சன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜான்சன் 9 ரன்கள் எடுத்த நிலையில் யாசீர் ஷா பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த டேரன் பிராவோ 13 ரன்னும், சாமுவேல்ஸ் 23 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினார்கள். தொடக்க வீரர்கள் பிராத்வைட் 67 ரன்கள் சேர்த்தார்.

    5-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய பிளாக்வுட், சேஸ் ஆகியோர் 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் வி்க்கெட்டுக்கள் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். பிளாக்வுட் 41 ரன்னுடனும், சேஸ் 17 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி நாளில் 285 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட்டுக்கள் இருந்தன.

    இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. பிளாக்வுட், சேஸ் ஆட்டத்தை தொடங்கினர். சேஸ் மேலும் 3 ரன்கள் எடுத்து 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால் பிளாக்வுட் நம்பிக்கையூட்டும் வகையில் விளையாடினார். அவருக்கு ஹோப் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தார்.

    பிளாக்வுட் 95 ரன்கள் எடுத்த நிலையில் யாசீர் ஷா பந்தில் கிளீன் போல்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஹோப் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 322 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தது. இதனால் பாகிஸ்தான் 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றி தொடரில் முன்னிலை வகிக்கிறது. யாசீர் ஷா சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தார். மொத்தம் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் 30-ந்தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×