search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: கேரள அணிக்கு 2-வது வெற்றி
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: கேரள அணிக்கு 2-வது வெற்றி

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.
    படோர்டா:

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

    3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் படோர்டாவில் நேற்று இரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதின. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடிய கோவா அணி 24-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. இடது புறத்தில் இருந்து ரிச்சர்லிசன் கடத்தி கொடுத்த பந்தை சக அணி வீரர் ஜூலியா சிஸர் (பிரேசில்) அருமையாக கோலுக்குள் திருப்பினார். முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    46-வது நிமிடத்தில் கேரளா அணி பதில் கோல் திருப்பியது. வலது புறத்தில் இருந்து முகமது ரபீக் கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் முகமது ரபி அருமையாக கோலாக்கினார். 84-வது நிமிடத்தில் கேரள அணி வீரர் பெல்போர்ட் (ஹைதி), கோவாவின் பின்கள வீரர்களை லாவகமாக ஏமாற்றி கோல் அடித்து எதிரணியினருக்கு அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு பதில் கோல் திருப்ப கோவா அணி எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் கேரள அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. 6-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும்.

    இன்று கொல்கத்தாவில் நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டீ கொல்கத்தா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 2 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 
    Next Story
    ×