search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    56 ரன்னில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது: பகல்-இரவு டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி
    X

    56 ரன்னில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது: பகல்-இரவு டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி

    56 ரன்னில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி பகல்-இரவு டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    துபாய்:

    பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய பகல்-இரவு டெஸ்ட் போட்டி துபாயில் நடந்தது.

    பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 579 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 357 ரன் எடுத்தது. ‘பாலோஆன்’ கொடுக்காமல் 222 ரன்கள் முன்னிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 123 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 346 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    346 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 251 ரன் தேவை கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் அந்த அணி தொடர்ந்து விளையாடியது.

    ஆட்டத்தின் முதல் பந்திலேயே சாமுவேல்ஸ் (4 ரன்) ஆட்டம் இழந்தார். உணவு இடைவேளையில் அந்த அணி மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. அதன்பிறகு இரண்டு விக்கெட்டை பாகிஸ்தான் கைப்பற்றியது.

    ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் இருந்த டாரன் பிராவோ சிறப்பாக விளையாடி தனி ஒருவராக தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடினார். அவர் சிறப்பாக ஆடி தனது 8-வது சதத்தை பதிவு செய்தார். 7-வது விக்கெட்டுக்கு அவருக்கு கேப்டன் ஹோல்டர் உறுதுணையாக இருந்தார். ஆனால் இறுதிவரை போராட முடியவில்லை.

    பிராவோ 116 ரன் எடுத்து இருந்தபோது யாசிர்ஷா பந்தில் ஆட்டம் இழந்தார். 406 நிமிடம் களத்தில் நின்று 289 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 263 ஆக இருந்தது.

    அதன்பிறகு எஞ்சிய 3 விக்கெட்டை அந்த அணி எளிதில் இழந்தது. வெஸ்ட்இண்டீஸ் 109 ஓவர்களில் 289 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் பரபரப்பான இந்த டெஸ்டில் பாகிஸ்தான் 56 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பகல்-இரவு டெஸ்டில் வென்ற 2-வது நாடு என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றது. முதல் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

    ஹோல்டர் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். முகமது அமீர் 3 விக்கெட்டும், யாசிர்ஷா, நவாஸ் தலா 2 விக்கெட்டும், வகாப் ரியாஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட் வருகிற 21-ந்தேதி அபுதாபியில் தொடங்குகிறது.

    Next Story
    ×