search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா டெஸ்டில் புஜாரா, ரகானே பொறுப்பான ஆட்டம்: முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 239/7
    X

    கொல்கத்தா டெஸ்டில் புஜாரா, ரகானே பொறுப்பான ஆட்டம்: முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 239/7

    புஜாரா, ரகானே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்துள்ளது.
    கொல்கத்தா:

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. லோகேஷ் ராகுலுக்குப் பதில் ஷிகர் தவானும், உமேஷ் யாதவுக்கு பதில் புவனேஷ்வர் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆடும் லெவனில் இடம்கிடைக்கும் என்று எதிர்பார்த்த காம்பீருக்கு ஏறமாற்றமே மிஞ்சியது. முதல் டெஸ்டை போலவே 4 பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கியது.

    நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கேப்டன் பொறுப்பு டெய்லருக்கு வழங்கப்பட்டது. வில்லியம்சனுக்குப் பதில் ஹென்றி நிக்கோல்ஸ் சேர்க்கப்பட்டார். கான்பூர் டெஸ்டில் இடம்பிடித்திருந்த மார்க் கிரேக், ஜோதி ஆகியோருக்கு பதில் ஜிதன் பட்டேல், மெட் ஹென்றி ஆடும் லெவனில் இடம் பெற்றனர்.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி துவக்க வீரர்களாக ஷிகர் தவான், முரளி விஜய் களமிறங்கினர். தவான் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஹென்றி பந்தில் ஸ்டம்பை இழந்தார். அதன்பின்னர் முரளி விஜயுடன் புஜாரா இணைந்து நிதானமாக விளையாடினார். ஆனால், மறுமுனையில் முரளி விஜய் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து புஜாராவுடன் கேப்டன் கோலி இணைந்தார்.

    ஆனால், 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கோலி ஆட்டம் இழந்தார். ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிய பந்தை தேவையி்ல்லாமல் அடித்து கோலி வெளியேறினார். இதனால் இந்தியா 46 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். இருவரும் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

    இந்தியாவின் ஸ்கோர் 187 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. புஜாரா 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் குவித்தது. புஜாரா அவுட்டானதும் ரோகித் சர்மா களம் இறங்கினார். இவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஜிதம் படேல் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரகானே 77 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதன்மூலம் இந்தியா 14 ரன்னிற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து வந்த அஸ்வின் 33 பந்தில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். 8-வது விக்கெட்டுக்கு சகாவுடன், ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 86 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சம் குறைவின் காரணமாக முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது.

    சகா 14 ரன்னுடனும், ஜடேஜா ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி சார்பில் ஹென்றி 3 விக்கெட்டும், படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
    Next Story
    ×