search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காம்பீருக்குப் பதில் தவான்: ஒரு ரன்னில் அவுட்டானதால் கேலி செய்த டுவிட்டர்வாசிகள்
    X

    காம்பீருக்குப் பதில் தவான்: ஒரு ரன்னில் அவுட்டானதால் கேலி செய்த டுவிட்டர்வாசிகள்

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் காம்பீருக்குப் பதிலாக தவான் களம் இறக்கப்பட்டார். அவர் ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அடைந்ததால் சமூக வலைத்தளங்களில் திட்டி வருகின்றனர்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் தொடக்க வீரராக களம் இறங்கிய லோகேஷ் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.

    இதனால் இன்று தொடங்கிய ஈடன் கார்டன் டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக காம்பீர் அணியில் சேர்க்கப்பட்டார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்த காம்பீருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பார்ம் இல்லாமல் தவிக்கும் தவானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    10 பந்துகளை சந்தித்த தவான் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டத்தின் 2-வது ஒவர் 4-வது பந்தில் அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆண்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தவான் 84 ரன்கள் எடுத்தார். அதன்பின் 27, 26 மற்றும் 1 ரன்கள் எடுத்ததால் கடைசி டெஸ்டில் இருந்து கழற்றி விடப்பட்டார். துலீப் கிரிக்கெட் இறுதிப் போட்டியிலும் இரண்டு இன்னிங்சில் தலா 29 ரன்களே சேர்த்தார்.

    ஆனால், காம்பீர் துலீப் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடினார். அவருக்கு இடம் கொடுக்காமல் தவானுக்கு இடம் கொடுக்கப்பட்டும், அதை சரியாக பயன்படுத்தாததால் தவானுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவரை கலாய்த்து வருகின்றனர்.

    ‘‘அணியில் காம்பீர் சேர்க்கப்பட்ட பிறகும், ஆடும் லெவனில் பார்ம் இல்லாமல் தவிக்கும் தவான் சேர்க்கப்பட்டுள்ளார். கோலி உண்மையிலேயே காம்பீர் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்துள்ளார்’’ என்று ஒருவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

    மற்றொருவர் ‘‘காம்பீருக்குப் பதில் தவானை ஆடும் லெவனில் சேர்த்தது, தேனிலவிற்கு சுவிட்சர்லாந்துக்குப் பதில் வங்காள தேசத்தை தேர்வு செய்ததுபோல் இருக்கிறது’’ என்று டுவிட் செய்துள்ளார்.

    இன்னொருவர், ‘‘இன்று ரிலீஸ் ஆன டோனி படத்தை முதல் நாள் முதல் ஷோ சென்று பார்க்க தவான் விரைவில் அவுட்டாகியிருப்பார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இன்னொருவர் ‘‘2 நிமிடங்கள்தான் மைதானத்தில் தவான் செலவிடுவதால், மேகி நூடுல்சின் அடுத்த விளம்பர தூதராவார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுபோன்று எராளமான கருத்துக்கள் தவானை கேலி செய்து கொண்டிருக்கின்றன.
    Next Story
    ×