search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரபுக்கள் போல் நடந்து கொள்வதா?: இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சுப்ரீம் கோர்ட் பாய்ச்சல்
    X

    பிரபுக்கள் போல் நடந்து கொள்வதா?: இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சுப்ரீம் கோர்ட் பாய்ச்சல்

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு ஒத்துழைக்காமலும், கட்டுப்படாமலும் பிரபுக்கள் போல் நடந்து கொள்வதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தை சுப்ரீம் கோர்ட் இன்று எச்சரித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) நிர்வாகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு பரிந்துரைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    மாநில சங்கத்தில் இருப்பவர்கள் பி.சி.சி.ஐ. நிர்வாகத்தில் இடம் பெறக் கூடாது, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாகிகளாக செயல்படக் கூடாது. ஒரு மாதத்துக்கு ஒரு ஒட்டு, மந்திரிகள், அரசு அதிகாரிகள் நிர்வாக பொறுப்பில் இருக்க கூடாது போன்ற பரிந்துரைகள் முக்கியமானது.

    இதற்கிடையே கிரிக்கெட் வாரியம் மீது லோதா கமிட்டி அதிருப்தி அடைந்துள்ளது. பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான காலக்கெடுவை அவமதித்து வருவதாகவும், பரிந்துரைகளை அமல்படுத்த விரும்பவில்லை என்றும் தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தது.

    இது தொடர்பாக கிரிக்கெட் வாரியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை இந்த கமிட்டி வலியுறுத்தியது. இந்த பரிந்துரைக்கு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எனவே லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவதில் பி.சி.சி.ஐ. தயக்கம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வின் முன்னர் நடந்தபோது லோதா கமிட்டி தனது அறிக்கையை சமர்பித்தது.

    லோதா கமிட்டி சார்பில் ஆஜரான வக்கீல், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்து வருவதாகவும், லோதா கமிட்டி குழுவினர் தொடர்ந்து அனுப்பிவந்த கடிதங்கள் மற்றும் இமெயில்களுக்கு பதில் அளிக்கவும் மறுத்து வருவதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.

    லோதா கமிட்டியின் பரிந்துரைகளை கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தாமல் புறக்கணிக்கிறது. நிர்வாக சீர்திருத்ததிற்கு பி.சி.சி.ஐ. முட்டுக்கட்டை போடுகிறது. பரிந்துரைகளை அமல்படுத்தாமல் மீறி செயல்படும் கிரிக்கெட் வாரிய தலைவர் அனு ராதாக்கூரை நீக்க வேண்டும். அவருக்கு பதிலாக கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் இது தொடர்பாக கூறியதாவது:-

    கோர்ட்டு உத்தரவை கிரிக்கெட் வாரியம் மீறுவதை சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்காது. நாங்கள்தான் சட்டம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நினைத்துகொண்டால் அந்த நினைப்பு தவறானதாகும். இந்த கோர்ட்டின் உத்தரவுக்கு அவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். நீங்கள் (இந்திய கிரிக்கெட் வாரியம்) பிரபுக்கள்போல் நடந்து கொள்கிறீர்கள். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு மீறப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    முறையாக, கோர்ட்டின் உத்தரவுகளுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லையென்றால், நாங்கள் உங்களை கட்டுப்பட வைக்க வேண்டியதாகிவிடும்

    இவ்வாறு அவர்கள் எச்சரித்தனர்.

    தங்களது உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க தவறுவதன்மூலம் அவமதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை அவர்கள் குற்றம்சாட்டினர்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், சுப்ரீம் கோர்ட்டின் பெரும்பாலான உத்தரவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட்டுதான் நடந்து வந்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ’தற்போது நடந்துவரும் விவகாரங்கள் தொடர்பாக எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. சட்டத்தை தோற்கடிக்க யாரும் முயற்சிக்க கூடாது. இந்த கோர்ட்டின் உத்தரவுக்கு கட்டுப்பட்டே தீரவேண்டும்’ என்றனர்.

    இந்த வழக்கு விசாரணை வருகிற 6-ந் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அப்போது கிரிக்கெட் வாரியம் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு வருகிற 30-ந்தேதி கூடுகிறது.
    Next Story
    ×