search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கான்பூர் டெஸ்ட்: வெற்றி விளிம்பில் இந்தியா; நியூசிலாந்து 93-க்கு 4 விக்கெட்டை இழந்து திணறல்
    X

    கான்பூர் டெஸ்ட்: வெற்றி விளிம்பில் இந்தியா; நியூசிலாந்து 93-க்கு 4 விக்கெட்டை இழந்து திணறல்

    கான்பூர் டெஸ்டில் 434 இலக்கை நோக்கிச்சென்ற நியூசிலாந்து அணி 93 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 262 ரன்னில் சுருண்டது. 56 ரன்களுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 64 ரன்னுடனும், புஜாரா 50 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய முரளி விஜய் 76 ரன்னிலும், புஜாரா 78 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த பிராட் கோலி 18 ரன்னும், ரகானே 40 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். இந்தியாவின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்னகள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 68 ரன்னுடனும், ஜடேஜா 50 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால், இந்தியா நியூசிலாந்தை விட மொத்தமாக 433 ரன்கள் அதிகம் பெற்றது. இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 434 ரன்கள் இலக்கான நிர்ணயிக்கப்பட்டது.

    கடின இலக்குடன் நியூசிலாந்து அணியின் குப்தில், லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.  அந்த அணியின் ஸ்கோர் 2 ரன்னாக இருக்கும்போது குப்தில் ரன்ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் கேன்வில்லியம்சன் களம் இறங்கினார்கள். மற்றொரு தொடக்க வீரர் லாதமை 2 ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பினார் அஸ்வின்.

    3-வது விக்கெட்டுக்கு வில்லியம்சன் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இருந்தாலும் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 43 ரன்னாக இருக்கும்போது அஸ்வின் வில்லியம்சனை வீழ்த்தினார். அவர் 25 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த விக்கெட் மூலம் அஸ்வின் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

    ராஸ் டெய்லர் 17 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அப்போது நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் சேர்த்திருந்தது. 5-வது விக்கெட்டுக்கு ரோஞ்சியுடன் சான்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அஸ்வின், ஜடேஜா பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு மேலும் விக்கெட்டுக்கள் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    இதனால் நியூசிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 37 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. ரோங்சி 38 ரன்னுடனும், சான்ட்னெர் 8 ரன்னுடளும் களத்தில் உள்ளனர்.

    நாளை ஒருநாள் முழுவதும் மீதமுள்ளது. நியூசிலாந்து கைவசம் 6 விக்கெட்டுக்கள்தான் உள்ளன. இன்னும் 341 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. இந்த ரன்களை எடுப்பதும் அல்லது 90 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடுவது என்பதும் நியூசிலாந்து வீரர்களுக்கு மிகக்கடினம். இதனால் இந்தியா இந்த டெஸ்டில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×