search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரை அணிக்கு எதிரான போட்டியில் திருவள்ளூர் அணி வெற்றி
    X

    டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரை அணிக்கு எதிரான போட்டியில் திருவள்ளூர் அணி வெற்றி

    இன்று நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் அணி மதுரை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழத்தியது.
    நத்தம்:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் மதுரையை வீழ்த்தி திருவள்ளூர் அணி 2-வது வெற்றியை ருசித்தது.

    8 அணிகள் இடையிலான முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் சென்னை சேப்பாக்கம், திண்டுக்கல் நத்தம், நெல்லை ஆகிய மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் நத்தத்தில் நேற்று நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்சும், மதுரை சூப்பர் ஜெயன்ட்சும் மோதின. மதுரை அணியில் கேப்டன் அருண் கார்த்திக் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஷிஜித் சந்திரன் கேப்டன் பொறுப்பை ஏற்றார். Ôடாஸ்Õ ஜெயித்து முதலில் பேட் செய்த திருவள்ளூர் அணியில் ஹரி நிஷாந்தும், சதுர்வேத்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் 3 ஓவர்களை எச்சரிக்கையுடன் எதிர்கொண்ட இவர்கள் அதன் பிறகு அடிக்க ஆரம்பித்தனர். 4-வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய சதுர்வேத், அடுத்த ஓவரில் ஒரு சிக்சர் பறக்க விட்டார். முதல் 5 ஓவர்களில் 40 ரன்கள் என்று நல்ல தொடக்கம் கண்டது.

    ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ரன்வேகம் தடம் புரண்டது. ஹரிநிஷாந்த் 19 ரன்னிலும், சதுர்வேத் 42 ரன்னிலும் (38 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தனர். இவர்களுக்கு பிறகு சஞ்சய் யாதவ் (28 ரன், 19 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) தவிர வேறு யாரும் குறிப்பிடும்படி ஆடவில்லை. பொறுப்பு கேப்டன் ரங்கராஜன் 3 ரன்னில் ஏமாற்றினார். 20 ஓவர் முடிவில் திருவள்ளூர் அணி 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் விளையாடிய மதுரை அணி தொடக்கத்தில் வெற்றியை நோக்கி பயணிப்பது போல் முன்னேறியது. ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 85 ரன்களுடன் (11.5 ஓவர்) வலுவான நிலையில் காணப்பட்டது. கேப்டன் ஷிஜித் சந்திரன் 40 ரன்களில் (32 பந்து, 7 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனதும் நிலைமை தலைகீழானது.

    அதன் பிறகு திருவள்ளூர் பவுலர்களின் ஆதிக்கம் படிப்படியாக ஓங்கியது. 14 முதல் 17 ஓவர்கள் வரை பந்து  எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை. இதனால் மதுரை அணி கடும் நெருக்கடிக்குள்ளானது. கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஆர்.ரோகித் அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன் தங்கள் அணியின் வெற்றிக்கு 'பாலம்' அமைத்து தந்தார். இதைத் தொடர்ந்து இறுதி ஓவரில் 19 ரன் தேவைப்பட்ட போது அதில் மதுரை அணி 12 ரன் மட்டுமே எடுத்து இரண்டாவது தோல்வியை தழுவியது.

    மதுரை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 137 ரன்களே எடுத்தது. இதன் மூலம் திருவள்ளூர் அணி 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. ஏற்கனவே காரைக்குடி காளையை வீழ்த்தியிருந்த திருவள்ளூர் அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

    Next Story
    ×