search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைதானம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது- பிராத்வைட்; மோசமான நிலையிலும் விளையாடியவன் நான்- டோனி
    X

    மைதானம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது- பிராத்வைட்; மோசமான நிலையிலும் விளையாடியவன் நான்- டோனி

    புளோரிடாவில் நடைபெற்ற 2-வது ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது குறித்து பிராத்வைட் கூறுகையில் மைதானம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது என்றார். இதுபோன்ற மோசமான நிலையில் விளையாடியுள்ளேன் என்று டோனி கூறியுள்ளார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடர் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் நடைபெற்றது. இதன் 2-வது ஆட்டம் கைவிடப்பட்டதால் இந்தியா தொடரை 0-1 என இழந்தது.

    முதல் போட்டியில் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனால், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 144 ரன்னில் சுருட்டியது. பின்னர் விளையாடிய இந்தியா 2 ஓவர்கள் முடிவில் 15 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது.

    பின்னர் நீண்ட நேரத்திற்குப்பின் மழை நின்றது. பவுண்டரி கோடு அருகே மைதானம் மோசமான வகையில் பாதிப்புக்குள்ளானதால் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.

    இந்த ஆட்டம் கைவிடப்பட்டது குறித்து இரண்டு நாட்டு அணிகளின் கேப்டன்களுக்கிடையே வேறுபட்ட கருத்து உள்ளது. இவர்கள் இருவரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்....

    ஆட்டம் கைவிடப்பட்டது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத் வைட் கூறுகையில் ‘‘பெவிலியனில் இருந்து பார்க்கும்போது மிட் ஆன் மற்றும் பந்து வீச்சாளர்கள் ஓடும் இடம் போன்ற இடத்தில் மைதானம் மிகவும் மோசமாக இருந்தது. ஆகவே, என்னுடைய கருத்து பாதுகாப்பற்றதாகும் என்பதுதான்.

    ஒருவேளை பந்து வீச்சாளர்கள் ஓடும் இடம் நன்றாக இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் பந்தை பவுண்டரி லைனுக்கு விரட்டும்போது வீரர்கள் அதை துரத்திச் செல்வார்கள். அப்போது வீரர்கள் கால் தடுமாறி கீழே விழுந்தால், அது வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துவிடும். போட்டி ரத்தாகும் என்பது குறித்து நான் சிந்திக்கவில்லை. நடுவர்கள் ஏற்கனவே இதுபோன்ற முடிவை எடுத்து வி்ட்டார்கள்’’ என்றார்.

    போட்டி கைவிடப்பட்டது குறித்து டோனி கூறுகையில் ‘‘நடுவர்கள் என்னிடம் என்ன சொன்னார்கள் என்றால், இங்கு போதுமான அளவு உபகரணங்கள் இல்லை. சூழ்நிலையும் மிக மோசமாக இருக்கிறது. இந்த நிலை முன்னேற்றம் அடைய வாய்ப்பில்லை என்றார்கள். இதனால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

    நான் கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறேன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நான் இதுபோன்ற மோசமான சூழ்நிலையில் விளையாடி இருக்கிறேன்.

    நான் 2011-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டியில் விளையாடிய தொடரை நினைவுபடுத்திப் பார்த்தால், அந்த தொடர் முழுவதும் நாங்கள் மழை குறுக்கீட்டிற்கிடையில்தான் விளையாடினோம். இதனால் இந்த சூழ்நிலை எலலாம் நடுவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்துதான். அவர்கள் விளையாட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் நாம் விளையாட வேண்டும். இந்த ஆடுகளம் சரிவராது என்று அவர்கள் நினைத்து விட்டால், அது விளையாடுவதற்கு தகுதியான ஆடுகளம் இல்லாததாக மாறிவிடும்.

    பிராத்வைட் சொன்ன இடத்தில்தான் நானும், பிராவோவும் நின்று கொண்டிருந்தோம். ஆனால், அந்த இடம் பந்து வீச்சாளர்கள் ஓடி வரும் இடத்தை விட்டு தூரத்தில் இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சோயிப் அக்தர் (இவர் பவுண்டரி லைனில் இருந்து ஓடி வந்து பந்து வீசுவார்) போன்ற நபர் இல்லை. ஆகவே, இது பெரிய கவலையளிக்கும் விஷயம் என்று நான் நினைக்கவில்லை’’ என்றார்.
    Next Story
    ×