search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 கிரிக்கெட்: ஒரு ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடம் வெற்றியை பறிகொடுத்தது இந்திய அணி
    X

    டி20 கிரிக்கெட்: ஒரு ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடம் வெற்றியை பறிகொடுத்தது இந்திய அணி

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்தது. அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுலின் சதம் வீணானது.
    புளோரிடா:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில், லெவிஸ் 49 பந்தில் 5 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் சதம் அடித்து ஆட்டமிழந்தார். சார்லஸ் 33 பந்தில் 6 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 79 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

    இந்த அணி சார்பில் ஜடேஜா, பும்ப்ரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். மொகமது சமி 4 ஓவரில் 48 ரன்னும், புவனேஸ்வர் குமார் 4 ஓவரில் 43 ரன்னும், அஸ்வின் 4 ஓவரில் 36 ரன்னும், ஜடேஜா 3 ஓவரில் 39 ரன்னும், பின்னி 1 ஓவரில் 32 ரன்னும் விட்டுக்கொடுத்தனர்.

    இதனையடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் ரகானே 7 ரன்களிலும், விராட் கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 4.4 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. 

    இதனையடுத்து, ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துகளை பதம் பார்த்தனர். ரோகித் சிக்ஸர்களாக விளாச, ராகுல் அற்புதமான பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

    இந்திய அணி 8.3 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. ரோகித் சர்மா 22 பந்துகளிலும், ராகுல் 26 பந்துகளிலும் அரைசதம் விளாசினர். சிறப்பாக விளையாடி வந்த ரோகித் 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    இதனையடுத்து, ராகுல் உடன் கேப்டன் தோனி இணைந்தார். இருவரும் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். கே.எல்.ராகுல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்து வீச்சை பதம் பார்த்தார். 16.2 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ராகுல், 46 பந்துகளில் சதம் விளாசினார். தோனியும் தனது பங்கிற்கு பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடித்தார். 

    இதனால் 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தாது. இறுதியாக கடைசி ஒவரில் 8 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. கடைசி ஓவரை பிராவோ வீசினார். 

    முதல் பந்திலேயே தோனி கொடுத்த கேட்சை சாமுவேல் தவறவிட்டார். இருப்பினும் அந்த பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2-வது பந்தில் ராகுல் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தை தோனி சந்தித்தார். லெக் பை மூலம் ஒரு ரன் கிடைத்தது. இதனால் கடைசி மூன்று பந்துகளில் 5 ரன்கள் தேவையாக இருந்தது. 

    4-வது பந்தை சந்தித்த ராகுல் ஒரு ரன் எடுக்க, 5-வது பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார். இதனால், கடைசி பந்தில் 2 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. ஆட்டத்தின் மிகவும் பரபரப்பான கட்டத்தில் கடைசி பந்தை பிராவோ வீச, தோனி சாமுவேல்ஸ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

    இதனால் எளிதில் வெற்றி பெற வேண்டிய இந்திய அணி, நூலிழையில் தோல்வி அடைந்தது. பிராவோவின் அற்புதமான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ரன்னில் வெற்றியை ருசித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராவோ மட்டும் அற்புதமாக பந்து வீசி 4 ஓவர்களில் 37 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

    கே.எல்.ராகுல் இறுதி வரை ஆட்டமிழக்காமல், 51 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தார். தோனி, 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

    வெஸ்ட் இன்டீசில் சதம் அடித்த லெவிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    Next Story
    ×